Aran Sei

அருந்ததியர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியினர் – நீதி வேண்டும் என இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் வலியுறுத்தல்

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கலசப்பாக்கம், வீரளூர் முன்னாள் தலித் ஊராட்சி தலைவர்களுக்கு ஆயுத உரிமம் அல்லது ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டத் தலித் மக்களுக்குத் தமிழக அரசு அரசின் எதிர்பாரா செலவினத் திட்டத்தின் கீழ், சிறப்புத் திட்டங்கள் நிவாரண உதவிகள் வழங்கப்படவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசிடம் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள வீரளூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர், உடையார், நாயுடு, கோனார் போன்ற சாதி இந்துக் குடும்பங்களும், 500-க்கும் மேற்பட்ட தலித் அருந்ததியர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இறந்த உடலை பொதுப்பாதை வழியாக தலித் மக்கள் கொண்டு செல்வதற்கு ஊர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 25.08.2021 அன்று ஆரணி கோட்டாட்சியர் மற்றும் கலசப்பாக்கம் வட்டாட்சியர் முன்னிலையில், தலித் அருந்ததியர்கள் இறக்க நேரிட்டால், உடலைச் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 14 தேதி அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த அமுதா என்பவர், உடல் நலக்குறைவால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் 15-ஆம் தேதி இறந்துள்ளார். அதற்கு மறுநாள் 16-ஆம் தேதி ஊரடங்கு என்பதால், அதற்கடுத்த நாள் 17 ஆம் தேதி உடலை அடக்கம் செய்யுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

இறந்த உடலை ஏற்கனவே அதிகாரிகள் முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவின்படி பொது வழியாகக் கொண்டு செல்வது குறித்து 15 ஆம் தேதி மாலை தலித் மக்கள் பேசியுள்ளனர். இதற்கு ஊர்க்காரர்கள் (உயர் சாதியினர்) எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சுமார் 4.00 மணியளவில் கிராமத்திற்கு நேரடியாகச் சென்றுள்ளனர். மேலும், போளூர் காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

சுடுகாட்டுப் பாதையினை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் பார்வையிடச் சென்றபோது, திடீரென 300-க்கும் மேற்பட்ட ஊர் பொது மக்கள் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். அங்குக் கூடிய தலித் மக்கள் அதிகாரிகளை பார்வையிட அனுமதிக்குமாறு கோரியுள்ளனர்.

அப்போது (16.01.2022) வீரளூர் கிராமத்தைச் சேர்ந்த மணி த/பெ முத்துமாணிக்கம், குமார த/பெ குப்பன். மணிகண்டன் த/பெ குமார், பழனி, ராஜா த/பெ ஜெயராமகவுண்டர் மற்றும் மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி த/பெ நல்லெண்ணகவுண்டர் ஆகியோர் தலைமையில் வீரளூர், மேல்சோழங்குப்பம், குற்றம்பள்ளி ஆகிய மூன்று கிராமத்தில் இருந்து சுமார் 500 – க்கும் மேற்பட்ட வன்னியர் சமூக இளைஞர்கள் பட்டாளி மக்கள் கட்சியின் உருவம் பதித்த பனியன் அணிந்துக் கொண்டு கையில் கத்தி, வெட்டு அரிவாள், கடப்பாரை, கருங்கல், தடி, கிரிக்கெட் மட்டை போன்ற ஆயுதங்களால் அருந்ததியர்களின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து கண்ணில் பட்ட அருந்ததியர் மக்கள் அனைவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். வன்னியர் அல்லாத பிற சாதி இந்துக்களும் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அருந்ததியர் மக்களின் வீடு, கதவு. ஜன்னல், பீரோ, மிக்சி, கிரைண்டர்ன், இருசக்கர வாகனங்கள், வீட்டின் ஓடு மற்றும் மின் இணைப்புப் பெட்டி போன்றவற்றை அடித்து, உடைத்து. மீண்டும் பயன்படுத்த முடியாதபடிக்கு சேதமாக்கினர்.

16.01.022 அன்று மாலை 4.30 மணியளவில் தொடங்கிய இந்த வன்கொடுமைத் தாக்குதல் ஏறக்குறைய 6.30 மணியளவில்தான் முடிந்துள்ளது. காவல் துணைக் கண்காணிப்பாளர், 10 காவலர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையில்தான். மேற்படித் தாக்குதல் தலித் அருந்ததியர்கள் மீது நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 17.01.2022 அன்று காலை 10 மணி அளவில் உயர் காவல் அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது, அன்று பிற்பகல் 3 மணி அளவில் அரசு மருத்துவமனையில் இருந்த அமுதாவின் சடலத்தை, காவல்துறையினர் பாதுகாப்புடன் எடுத்துவந்து அவரது வீட்டில் இறுதிச் சடங்குகள் செய்து நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பா.ம.கட்சியைச் சேர்ந்த வன்னியர் சாதியினர் உள்ளிட்ட சாதி இந்துக்கள் நடத்திய தாக்குதலில், தலித் அருந்ததியர் மக்களின் இருசக்கர வாகனங்கள், டாடாஏசி வண்டி, ஆட்டோ என 45 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 35 நபர்கள் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தலித் மக்கள் கலசப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சை எடுக்கச் சென்றபோது, கடலாடி காவல்நிலையத்திலிருந்து மெமொ வாங்கிக்கொண்டு வந்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும்

வன்கொடுமைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள தலித் அருந்ததியர் மக்களுக்குக் குடிதண்ணீர், மின்சாரம், பால், காய்கறிகள் மருத்துவம் உள்ளிட்ட எதுவும் தர மறுத்து, சமூகப் புறக்கணிப்பில் ஆதிக்க சாதியினர் ஈடுபட்டுள்ளனர்.

தலித் மக்கள் பயன்படுத்திய குடிநீர்த் தொட்டியில் சிறுநீர் மற்றும் மலம் கழித்துப் பயன்படுத்தமுடியாத வெறிச் செயலில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதியினர். குடிநீருக்காக இருந்த சிறிய தண்ணீர் டேங்கையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும், விவசாய நிலத்திற்குச் செல்ல முடியாத முள் வெட்டி போட்டு வழியைத் தடுத்துள்ளார்கள்.

வன்கொடுமைத் தாக்குதல் தொடர்பாகக் கடலாடி காவல் நிலையத்தில் கா.நி.கு.எண் 38/2022 நாள் 17.01.2022 பிரிவுகள் 147, 148, 324 IPC, 3(ii)(va), 3(i){za)(A) SC/ST PoA Act 2016, 3(1) of PPD Act 1992 இன் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் உள்ளிட்டோர் 18.01,2022 அன்று வன்கொடுமைத் தாக்குதல் நடந்த இடங்களை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் பாதிப்பினை கேட்டறிந்தனர். அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் உடனிருந்தனர். ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உடனிருந்தனர்.

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் பரிந்துரைகள்.

1. கும்பலாகக் கூடித் திட்டமிட்டு, காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் தலித் மக்கள் மீது கூட்டாக வன்கொடுமைத் தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியக் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும்.

2. வன்கொடுமைத் தாக்குதலில் சேதமடைந்த வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவேண்டும்.

3. சாதி வெறிக்கும்பலின் திட்டமிட்ட குறிவைக்கப்பட்ட தாக்குதலுக்கு ஆளாகியுள்ள தலித் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திரு முத்துராமன், திரு ஏழுமலை மற்றும் திரு கேசவன் ஆகியோருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 3(v) இன் கீழ் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமம் வழங்கப்படவேண்டும். அதுவரை, ஏந்திய காவல் துறை பாதுகாப்பு மேற்படி மூவருக்கும் துப்பாக்கி ஏந்திய வழங்கப்படவேண்டும்.

4. சாதி இந்துக்களின் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆளாகியுள்ள தலித் அருந்ததியர் மக்களுக்குத் தேவையான குடிநீர், பால், மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக வழங்கப்படவேண்டும்.

5. தாக்குதலில் உடல் மற்றும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டோருக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படவேண்டும். குறிப்பாக, தாக்குதலை நேரில் கண்டு குழந்தைகள், பெண்கள் பெரும் மன பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். எனவே, கிராமத்தில் நேரடியாக மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். மேலும், குழந்தைகள், பெண்கள் அனைவருக்கும் ஆற்றுப்படுத்தல் (Counseling) அளிக்கப்படவேண்டும்.

6. வன்கொடுமைத் தடுப்பு திருத்தச் சட்டம் – 2015 இன் கீழ், தமிழக அரசு அரசின் எதிர்பாரா செலவினத் திட்டத்தினை எண் 281, செப்டம்பர் 1.2017 அன்று அரசிதழில் வெளியிட்டது. இதனடிப்படையில் வீராளூர் தவித் மக்களுக்குச் சிறப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். கும்பல் நடத்திய வன்கொடுமைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிராமத்தில் உள்ள அனைத்து தலித் அருந்ததியர் குடும்பத்திற்கும் நிலைமை சீரடையும் வரையிலோ அல்லது மூன்று மாதத்திற்கோ உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழங்கிடவேண்டும்.

7. வன்கொடுமைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 16-இன் படி கூட்டு அபராதம் விதிக்கப்படவேண்டும். தொடர்ந்து அவர்கள் வன்கொடுமையில் ஈடுபடக்கூடும் என்பதால், பிரிவு 10(1) இன் கீழ் அவர்களை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்

8. சமீப காலங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலித் / பழங்குடியினர் மீது நடைபெறும் வன்கொடுமைத் தாக்குதலில் சாதி இந்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர். பெண்கள், சிறுவர்கள் தாக்குதல் நடத்தினால், சட்டத்தின் பிடியிலிருந்து எளிதில் தப்பித்துக்கொள்ளலாம் என்பதற்காகவே இதுபோன்ற வன்கொடுமைத் தாக்குதலைச் சாதியச் சங்கங்கள் திட்டமிட்டு வளர்த்தெடுக்கின்றன. பெண்கள், குழந்தைகள் வன்கொடுமைக் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்படும் இந்நிலை பெரிதும் கவலைக்குரியதாகும். எனவே, சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு உள்ளிட்ட அரசின் அனைத்து துறைகள் மூலம் சாதி வெறிக்கு எதிராகவும், சமூக நீதிக் கருத்துகளும் பரப்புரை செய்யவேண்டும். குறிப்பாக, பாடப்புத்தகங்களில் சாதியத்திற்கு எதிரான சமூக நீதி மற்றும் பகுத்தறிவு கருத்துகள் அடங்கிய பாடங்கள், செயல்பாடுகள், களப்பயணங்கள் சேர்க்கப்படவேண்டும்” என்று இந்த அறிக்கையில் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் கோரிக்கை வைத்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்