Aran Sei

சாதி பெயரைச் சொல்லித் திட்டுகிறார்கள் – ஊராட்சி மன்ற பெண் தலைவர்

ராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள் தன் சாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் ஊராட்சி மன்றத்தின் பெண் தலைவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்தில் உள்ளது மேலக்கால். அங்கு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் வீ.முருகேஸ்வரி. இவர், தனது கணவர் வீரபுத்திரனுடன் நேற்று (அக்டோபர் 29) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.

அதில்,“நான் மேலக்கால் ஊராட்சியில் தலைவராக இருந்து வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். ஆகையால், நான் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றாலே, என்னை சாதி பெயரைச் சொல்லியும், அசிங்கமான வார்த்தைகளாலும் ஊராட்சி உறுப்பினர்களான காசிலிங்கம், முனியம்மாளின் கணவர் பாண்டி, தமிழ்ச்செல்வியின் கணவர் ஆகிய மூவரும் சேர்ந்து திட்டுகின்றனர்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்கள் தன்னை எந்தப் பணியும் செய்ய விடாமலும், எந்தவொரு கூட்டத்தையும் நடத்தவிடாமலும் தடுக்கின்றனர் என்று கூறியுள்ளவர், இதற்கு அரசு அதிகாரி சார்லஸ் உடந்தையாக செயல்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நான் சுதந்திரமாக செயல்பட வழிவகுக்க வேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவி வீ.முருகேஸ்வரியின் கணவர் வீரபுத்திரனுடன் அரண்செய் பேசிய போது, “மனு கொடுக்கப்பட்ட பின், உயரதிகாரிகள் போன் செய்தார்கள். முன்னாலேயே எங்களிடம் சொல்லி இருக்கலாம் என்றார்கள். அவர்கள் ஏற்கனவே ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி தலைமையில், ஊராட்சி கூட்டத்தை நடத்த முயன்று, ஆதிக்க தரப்பின் தொந்தரவால் அப்படியே விட்டுவிட்டார். இப்போது மட்டும் என்ன செய்துவிட போகிறார்கள்.” என்று கூறினார்.

மேலும், நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, ”ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நாளை இரு தரப்பையும் வைத்து, விசாரணை நடத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.

சமீபத்தில், கடலூர் மாவட்டம் தெற்குத்திட்டை ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமரவைத்து கூட்டம் நடத்திய செயலாளர் பணியிடை நீக்கம். துணைத்தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டதின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தெற்குத்திட்டை தீண்டாமை: `தலைவருக்கு அவமானம்’ – செயலாளர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஊராட்சி மன்றத் தலைவரை சவக்குழி தோண்ட வைத்தது, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவரான அமிர்தத்தைத் தேசிய கொடி ஏற்ற விடாமல் தடுத்தது, கோவை மாவட்டம் கிருஷணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதாவை சாதி பெயர் சொல்லித் திட்டியது, என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடர்ந்து சாதியைக் காரணம் காட்டி அவமதிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்