Aran Sei

`முந்திரி வியாபாரி படுகொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் – காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை

கடலூர் மாவட்டம் நெய்வேலி காவல் நிலையத்தில் முந்திரி வியாபாரி செல்வமுருகனைச் சித்திரவதை செய்து அடித்துக் கொலை செய்த சம்பவத்தை எதிர்த்து `காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ கடிதம் எழுதியுள்ளது.

காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவர் அப்பகுதியில் முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி நெய்வேலி நகரப் பகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாகக் கூறி செல்வமுருகனை நெய்வேலி நகரக் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்று பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிறகு அவரை விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் அவருக்குக் கடந்த 2ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். என்று பிபிசி  குறிப்பிடுகிறது.

”சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் கிளை சிறைக்கு அனுப்பப்பட்டார். பின்னர், 4ஆம் தேதி இரவு மீண்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது” எனத் தெரிவிக்கிறது பிபிசி செய்தி குறிப்பு.

இதனைத் தொடர்ந்து போலீஸார் செல்வமுருகனின் உடலைப் பெற்றுக்கொண்டு, பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. காடாம்புலியூரில் அவரது உறவினர்கள், போலீஸாரைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்’ என்று தி இந்து தெரிவித்துள்ளது.

உயிரிழந்த செல்வமுருகனின் மனைவி பிரேமா, தனது கணவர் போலீஸார் அடித்துச் சித்ரவதை செய்ததால்தான் உயிரிழந்துள்ளார் என்றும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை கணவர் உடலை வாங்கமாட்டேன் என்றும் கூறி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்குப் புகார் மனு அளித்துள்ளார். இவருக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று அறிக்கை விடுத்தனர்.’ என்று தி இந்து குறிப்பிட்டுள்ளது.

”இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. நேற்று (நவ.8) கடலூர் சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீஸார், நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையம் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, விருத்தாசலம் கிளை சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று விசாரணை நடத்தப்படும் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.’ என்று தகவல் வெளியாகி உள்ளது.

செல்வமுருகன் கொலையைக் கண்டித்து `காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

“தமிழகத்தில் சமீப காலமாகக் காவல் நிலைய சித்திரவதை மரணங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. அதன் தொடர்ச்சியாகத் தற்போது கடலூர் மாவட்டம் நெய்வேலி காவல் நிலையத்தில் செல்வமுருகன் என்பவர் காவல் சித்திரவதையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த படுகொலை சம்பவத்தை, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.” என்று கூறியுள்ளது.

“படுகொலைக்குக் காரணமான காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் அவரது தலைமையில் செயல்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும்” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“காவல் சித்திரவதையால் படுகொலையான செல்வமுருகன் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சார்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி வழங்க வேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளது.

“செல்வமுருகன் காவல் சித்திரவதை படுகொலை வழக்கில் உள்ளூர் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதால் இவ்வழக்கினை உடனடியாக சிபிசிஐடி காவல் துறையினரிடம் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். மேலும் IPS அந்தஸ்துடைய காவல் அலுவலர் நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.” என்று கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.

“செல்வமுருகனை விசாரணைக்காகப் போலீசார் அழைத்துச் சென்ற நாளில் இருந்து சிறைக்கு அனுப்பப்பட்ட நாள்வரை நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் உள்ள CCTV பதிவு ஆவணங்களை கைப்பற்றி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’காவல் சித்திரவதையால் படுகொலையான செல்வமுருகனின் உடலைத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினரைக் கொண்டு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் உடற் கூறாய்வினை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்’ என்றும் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்