நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
“இஸ்லாமிய பெண்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடன், என்னுடைய புகைப்படத்தை தவறாக சித்தரித்து இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர்” என்று டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் இணையவழியில் காவல்துறையில் புகார் அளித்ததோடு, அப்புகாரின் நகலை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
தன்னுடைய ட்விட்டர் பதிவில், “என்னுடைய புகைப்படத்தை மாற்றம் செய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்யும் செயல். புல்லி பாய் என்ற இணையதளத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. என்னை மட்டுமல்ல பல பெண்களையும் இதுபோன்று சித்தரித்துள்ளனர். இந்த இணையதளமே இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லி தென்கிழக்கு மாவட்டத்தின் சைபர் காவல் நிலையத்தில், நேற்று(ஜனவரி 1) இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை இன்று(ஜனவரி 2) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “பத்திரிக்கையாளரின் புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 509 (ஒரு பெண்ணை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயலில் ஈடுபடுதல்) மற்றும் 354ஏ (பாலியல் துன்புறுத்தல் மற்றும் அத்துன்புறுத்தலுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹிட்ஹப் தளம் மற்றும் புல்லிபாய் செயலியை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தளமும், செயலிமும் முடக்கப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கை எடுப்பதை நான் கண்காணித்து வருகிறேன். ஹிட்ஹப் தளம் இன்று காலை முற்றிலுமாக முடக்கப்பட்டது. கணினி அவசரகால அதிரடிப்படையுடன் காவல்துறையினரும் இணைந்து நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.