அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான பதவி நீக்க வழக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் நடந்து வருகிறது.
அந்த வழக்கு விசாரணையின் இரண்டாம் நாளான நேற்று, சென்ற ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறை தொடர்பான, இதுவரை வெளியிடப்படாத அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் காட்டப்பட்டதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.
முன்னதாக, செவ்வாய்க் கிழமை அன்று அதிபர் பதவிக் காலம் முடிந்த பிறகு, ஒரு அதிபர் மீது பதவி நீக்க வழக்கை நடத்தலாமா கூடாதா என்ற விவாதத்தில், அமெரிக்க நாடாளுமன்ற மேலவை 56 – 44 என்ற விகிதத்தில் வழக்கை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.
பதவிக் காலம் முடிந்த பிறகு, வழக்கு நடத்துவதற்கு 18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், பதவிக் காலம் முடிந்து இங்கிலாந்து போன பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு, கொலை குற்றச்சாட்டு ஆகியவற்றின் மீது வழக்கு விசாரணை நடத்தப்பட்டதை முன் உதாரணமாக பதவிநீக்க வழக்கு நடத்தும் தரப்பினர் தெரிவித்துள்ளனர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க மேலவையில் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 50 உறுப்பினர்களும், இப்போதைய அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கு 50 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 6 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து பதவிநீக்க வழக்கை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?
இந்த பதவி நீக்க வழக்கு விசாரணையின் முடிவு எடுக்கும் ஜூரர்களாக 100 மேலவை உறுப்பினர்கள் இருப்பார்கள். பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் வழக்கை நடத்துகின்றனர். டிரம்ப் தரப்பில் வழக்கறிஞர் குழு ஒன்று எதிர் வழக்காடுகிறது.
மொத்த மேலவை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் (67 பேர்), பதவி நீக்கத்துக்கான குற்றங்களை உறுதி செய்து வாக்களித்தால் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்கம் உறுதி செய்யப்படும். அதைத் தொடர்ந்து அவர் எதிர்காலத்தில் தேர்தலில் நிற்பதை தடை செய்வதற்கான தீர்மானத்தை மேலவை நிறைவேற்ற முடியும் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2017 முதல் அமெரிக்க அதிபராக பதவி வகித்த டொனால்ட் டிரம்ப் மீது, சென்ற ஜனவரி 6-ம் தேதி நாடாளுமன்ற கட்டிட வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்யும் படி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஜனவரி 14-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.
அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை – அதிபர் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி நடந்த அடுத்த அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில், மாநில வாரியான தேர்வாளர்களில் 306 பேரை வென்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். டிரம்புக்கு 232 தேர்வாளர்கள் மட்டுமே கிடைத்தனர்.
ஆனால், இந்தத் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்த டொனால்ட் டிரம்ப் தரப்பு, தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இலட்சக்கணக்கான போலி வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் ஒன்றிய நீதிமன்றங்களிலும் 62 சட்டரீதியான வழக்குகளை தாக்கல் செய்தனர். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன அல்லது தோற்றுப் போயின.
அமெரிக்க அதிபர் தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை – குழப்பம் இன்று தீருமா?
இதைத் தொடர்ந்து, அதிபராக இருந்த டிரம்ப், மாநிலங்களில் தேர்தல் நடத்தும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளிடம் தேர்தல் முடிவுகளை மாற்றும்படி அழுத்தம் கொடுத்தார். அவ்வாறு செய்ய மறுத்தவர்களை அவர் பொதுவெளியில் கண்டித்தார்.
ஜார்ஜியா மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை மாற்றுவதற்கு போதுமான அளவு வாக்குகளை கண்டுபிடிக்கும்படி அவர் அம்மாநில அமைச்சருக்கு அழுத்தம் கொடுத்த தொலைபேசி ஆடியோ பதிவு, இப்போது நடைபெறும் பதவிநீக்க வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தி கார்டியன் தெரிவிக்கிறது.
மாநிலங்களில் தேர்வாளர் பட்டியல்கள் இறுதி செய்யப்பட்டு, டிசம்பர் 14-ம் தேதி அவரை நாட்டின் தலைநகரான வாஷிங்டன் நகருக்கு அனுப்பப்பட்டன. ஜனவரி 6-ம் தேதி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்தப் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளித்து புதிய அதிபர் தேர்தலை உறுதி செய்யும் நிகழ்வு நடைபெற இருந்தது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு – டிரம்ப் தரப்பு எதிர்ப்பு தொடர்கிறது
இதற்கிடையில் அதிபர் டிரம்ப் ட்விட்டர் மூலமாகவும், பேட்டிகள் மூலமாகவும் தேர்தல் முறைகேடு பற்றிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்த ட்வீட்டுகளை, டிரம்ப் ஜனவரி 6 கலவரத்தை திட்டமிட்டு தூண்டி நடத்தினார் என்பதற்கான ஆதாரமாக, பதவிநீக்க வழக்கை நடத்தும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்துக்கு, டொனால்ட் டிரம்பின் துணை அதிபரான மைக் பென்ஸ், மேலவையின் தலைவர் என்ற வகையில், தலைமை தாங்கினார். பிரதிநிதிகள் சபையின் தலைவரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசியும் கூட்டத்தில் கலந்து கொண்டார். துணை அதிபரான மைக் பென்ஸ், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்காமல் தடை செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கோரியிருந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் – முடிவை மாற்றும் முயற்சிகளில் பின்னடைவு, டிரம்ப் தலைமறைவு
நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் தொடங்கும் நாள் காலையில் வாஷிங்டன் நகரில் கூடிய ஒரு கும்பலுக்கு மத்தியில் உரையாற்றிய டிரம்ப், அந்தக் கும்பலைச் சேர்ந்த தீவிர வலதுசாரி அமைப்பினரை தூண்டி விட்டு, நாடாளுமன்ற கட்டிடத்தின் மீதான வன்முறைக்கு வழி வகுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நாடாளுமன்ற கட்டிடத்தின் மீதான வன்முறை கும்பலின் தாக்குதலின் விளைவாக, கூட்டம் கலைக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் வன்முறை கும்பல் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைந்தது.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் வன்முறையால் கலைப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு கும்பல் நடவடிக்கை
“மைக் பென்சை தூக்கிலிடு”, “மைக் பென்சை வெளியில் கொண்டு வாருங்கள்” என்று முழக்கமிட்டுக் கொண்டு அவர்கள் உள்ளே வரும் வீடியோ நேற்று மேலவையில் நடைபெற்ற பதவிநீக்க வழக்கு விசாரணையின் போது காட்டப்பட்டுள்ளது. அவர்கள் மைக் பென்ஸ் தனது குடும்பத்துடன் பதுங்கியிருந்த இடத்துக்கு 100 அடி தூரம் வரை வந்து விட்டனர் என்று பதவிநீக்க வழக்கை நடத்தும் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த கலவர கும்பல், கட்டிடத்துக்கு வெளியில் ஒரு தூக்கு மரத்தையும் எழுப்பியது வீடியோவில் பதிவாகியுள்ளதை தி கார்டியன் குறிப்பிடுகிறது.
நான்சி பெலோசியின் அலுவலகத்துக்குள் புகுந்த கும்பல், நான்சி பெலோசியை தேடிய போது அவரது அலுவலக ஊழியர்கள் ஆபத்துக்கு நெருக்கமாக அருகிலேயே ஒழிந்திருந்த நிலையும் காணொளிகளில் காட்டப்பட்டது.
டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவதை உறுதி செய்யும் வகையில் 17 குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை மாற்றுவதற்கு இந்த ஆதாரங்கள் வழி வகுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்ற தி கார்டியன் கருத்து தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.