சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகர் உள்ளது. அங்குள்ள இளங்கோ தெரு பக்கிங்காம் கால்வாயை ஒட்டி உள்ளது. இந்த தெருவில் இருந்த 625 வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பக்கிங்காம் கரையோரம் இருந்த 366 வீடுகள் அகற்றப்பட்டன. மீதம் உள்ள 259 வீடுகளை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து வருவாய்த் துறை சார்பில் அங்குள்ள வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் காவல்துறை உதவியுடன் இளங்கோ தெருவில் உள்ள வீடுகள் இடிக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த கண்ணையா என்பவர் நேற்று முன்தினம் தீக்குளித்தார். மேலும் அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ஆர்.ஏ.புரத்தில் வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. அதில் ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிம்ன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கான்வில்கர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்படுவோருக்கு இடம் தயாராக உள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்காலிகமாக மாற்று இடம் வழங்க அரசுக்கு அறிவுறுத்தல் வழங்குகிறோம். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றும் விசயங்களில் நீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்பட வேண்டும். மேலும் தற்போது முதலமைச்சர் சட்டப் பேரவையில் மாற்று இடம் தொடர்பாக அறிவிப்பை கொடுத்துள்ளார் என கூறுகின்றீர்கள். அது சாதாரண விசயம் கிடையாது. முதல்வர் இந்த விவகாரத்தில் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார் எனத் தெரிகிறது.
எனவே ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம். அதேவேளையில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை ஜூலை 12க்கு ஒத்திவைக்கிறோம்.
அன்றைய தினம் ஆக்கிரமிப்பு அகற்றம், மாற்று இடம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Source: news7tamil
பாஜகவின் கலவர திட்டத்தை முறியடிச்ச திமுக Manoj Kumar Interview | Dharmapuram Adheenam
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.