Aran Sei

முன்னாள் தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஒப்புதல் அளிக்க அரசு வழக்கறிஞர் மறுப்பு

credits : the hindu

உச்ச நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்த, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கோரிய மனுவிற்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில், இந்தியா டுடே நிறுவனம் நடத்திய ”கான்க்லேவ்” நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய, முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ”நீங்கள் நீதிமன்றம் சென்றால், உங்களுக்கு நீதி கிடைக்காது. அங்கு தொடர்ந்து செல்வதால் உங்கள் துணி அழுக்காகி, துணியைத் தான் வெளுக்க முடியும். இவ்வாறு கூறுவதில் எனக்குத் தயக்கமில்லை. யார் இப்போது நீதிமன்றம் செல்கிறார்கள்? நீதிமன்றம் சென்றால், அங்கு ஏன் சென்றோம், என்று நீங்கள் வருத்தம் தான் அடைவீர்கள். நீங்கள் ஒரு கார்ப்பரேட்டாக இருந்தால் நீதிமன்றம் செல்லலாம்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ”இந்தியாவின் நீதித்துறை இடிந்து விழும் தருவாயில் உள்ளது” என தெரிவித்த ரஞ்சன் கோகாய், மாவட்ட நீதிமன்றங்களில் 4 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதையும், உயர் நீதிமன்றங்களில் 44 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதையும், உச்ச நீதிமன்றத்தில் 70,000 வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு – வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

இந்நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் நீதிமன்றத்தின் மாண்பை குறைத்தும், நீதிமன்றத்தை அவமதித்தும் பேசிய ரஞ்சன் கோகாய் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என, சாகேத் கோகலே என்பவர், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடத்தில் ஒப்புதல் கோரியதாக தி இந்து கூறுகிறது.

நீங்கள் கார்ப்பரேட்டாக இருந்தால் நீதிமன்றம் செல்லலாம் – சாமானியர் நீதிமன்றம் சென்றால் வருத்தம் தான் அடைவர் – முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்

அவருக்கு கடிதம் மூலம் பதிலளித்துள்ள அரசு தரப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ”ரஞ்சன் கோகாய் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தாலும், நீதித்துறையின் நன்மைக்காகவே அவ்வாறு பேசியுள்ளார். அது எந்த வகையிலும் நீதிமன்றத்தை அவமதித்து ஆகாது. மக்களிடத்தில் நீதிமன்றத்தின் மாண்பையும் குறைத்து காட்டாது” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘பிரதமர் அலுவலகம் தனிச் சிறப்பானது, வழக்கை நிலுவையில் வைத்திருக்க முடியாது” : உச்சநீதிமன்றம்

அவருடைய பேச்சு விரக்தியின் வெளிபாடு என கூறியுள்ள வேணுகோபால், ரஞ்சன் கோகாய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தொடர கோரிய ஒப்புதலை நிராகரித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, அரசு தலைமை வழக்கறிஞரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்