Aran Sei

ஐஐடி களில் இடஒதுக்கீடு ரத்து : அறிக்கையைக் குப்பையில் எறியுங்கள் – சு. வெங்கடேசன்

ஐஐடி களில் இடஒதுக்கீடுக்கெதிராக ஆய்வுக்குழு சமர்ப்பித்த அறிக்கையைக் குப்பையில் தூக்கி எறியுங்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எழுதிய கடித்ததில் மதுரை பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உயர் தொழிற்நுட்ப கல்விப்புலமாக விளங்கும் ஐஐடி யில் ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை மொத்தமாக ரத்து செய்வதற்கு பரிந்துரை அளித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்றும்  இக்குழுவின் மற்ற பரிந்துரைகளும் சமூகநீதிக் கொள்கைகளை, ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்கான அரசின் சமூகப் பொறுப்பை புறம் தள்ளும் பிற்போக்குத்தனத்தைக் கொண்டதாகவே உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

ஐஐடி பேராசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு தேவையில்லை – கல்வித் தரம் பாதிக்கும் என்று மத்தியக் குழு கருத்து

இந்த அறிக்கை மொத்தமாக நிராகரிக்கப்பட வேண்டியதாகவும் குப்பைத் தொட்டியில் வீசியெறியப் வேண்டியதாகவும் உள்ளது என்றும் தெரிவித்த அவர், அப்பரிந்துரைகளின் உள்ளடக்கமும், தொனியும் இந்திய சமூகத்தின் சமூக யதார்த்தங்களை சிறிதளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“உலகின் மற்ற பெரும் கல்வி நிலையங்களோடு சீர் மிகு செயல்பாடு, தரம் மிக்க கல்வி, ஆய்வு, ஆசிரியப் பணி ஆகியவற்றில் போட்டியிடத் தக்க வகையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பான இலக்குகளை நிறைவேற்ற அழுத்தம் தருகிற முறைமை தேவைப்படுகிறது. அது குறிப்பான இட ஒதுக்கீடுகளாக அல்லாது பன்முகப் பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிற பொதுவெளி பிரச்சாரம், இலக்கிடப்பட்ட பணி நியமனங்கள் ‌உள்ளிட்டவைகளாக இருக்க வேண்டுமெனப் பரிந்துரைக்கிறோம்” என்று ஆய்விக்குழுவின் அறிக்கையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

`இது கல்வியைப் பார்ப்பன மயமாக்கும் முயற்சி’ – ஜேஎன்யு ஆசிரியர் சங்கம்

மத்தியக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 பிரிவு 4 ன் விதி விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலில் ஐ.ஐ.டி களையும் இணைத்து இட ஒதுக்கீடு வரம்பில் இருந்து அகற்றுமாறு அக்குழு பரிந்துரைத்துள்ளதை மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியக் கல்வி நிறுவனங்கள் ( மாணவர் அனுமதி இடஒதுக்கீட்டுச் சட்டம் 2006) மற்றும் மத்தியக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பதவிகளில் இடஒதுக்கீடு சட்டம் 2019) ஆகியவற்றை சரியானவகையில் அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய அமைக்கப்பட்ட குழு என்ற நோக்கத்திற்கு எதிராகவும் செயல்பட்டுள்ளது என்று கருத்துவதாக தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையில் ‘இடஒதுக்கீடு’ என்ற சொல்லே இடம் பெறாதது ஏன்? – சீதாராம் யெச்சூரி

‘சீர்மிகு செயல்பாடு’ ‘தரம்’ போன்றவற்றின் இலக்கணங்களை மனு ஸ்மிருதி அணுகலோடே அறிக்கை  முன் வைத்துள்ளது என்று குற்றம் சாட்டிய அவர்,  அக்குழுவின் வாதங்கள், இந்த இலக்குகளை எட்ட இடஒதுக்கீடு தடையாக உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது ‘ சாதியே ‘ தவிர ‘ இட ஒதுக்கீடு’ அல்ல. இதுவே மகத்தான சமூக சீர்திருத்த ஆளுமைகளான டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், ஜோதிபா புலே, அய்யங்காளி போன்றோர் தந்த வெளிச்சம் en உண்மையில் சமூகத்தின் சீர் மிகு செயல்பாட்டிற்கும், தர மேம்பாட்டிற்கும் பெருமளவு மக்களைப் பங்களிக்கச் செய்திருக்கிற அருமருந்தே இட ஒதுக்கீடு என்று தெரிவித்துள்ளார்.

தேர்வை நடத்த அருகதையற்றவர்கள் கல்விக்குத் தரம் நிர்ணயிப்பது வேடிக்கை – கனிமொழி எம்.பி

மேலும், ஆய்வுக்குழு அறிக்கையில், ”ஓராண்டில் தகுதியான தேர்வர்கள் கிடைக்காவிடில், நிரப்பப்படாத SC/ST/OBC/EWS நிலுவை காலியிடங்களை, பணி நியமன அதிகாரம் படைத்தவர்களின், (அதாவது, அந்தந்த ஐஐடியின் ஆளுநர் பேரவை – Board of Governors) ஒப்புதலோடு பொதுப் பட்டியலுக்கு அடுத்த ஆண்டிலேயே மாற்றம் செய்யலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத சமூக இடைவெளியை சரி செய்யும் ‘நிலுவைக் காலியிடம் எதிர் காலத்திற்கு எடுத்துச் செல்லப்படல்’ (Carry forward of Back log vacancies) என்ற ஏற்பாட்டையே மொத்தமாக அழிப்பதற்கான அப்பட்டமான முயற்சி என்று குற்றம் சாட்டியுள்ளார்.

”கடந்த ஐந்தாண்டு காலத்தில் 23 ஐஐடிகளில், முனைவர் பட்ட அனுமதிகளில் 9.1 சதம் மட்டுமே பட்டியல் சாதியினர், 2.1 சதம் மட்டுமே பழங்குடியினர். இது முன்னவர்களுக்கான ஒதுக்கீடான 15 சதத்திற்கும், பின்னவர்களுக்கான 7.5 சத ஒதுக்கீட்டிற்கும் குறைவானது” என்றும் பாரளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

6 மாநிலங்களில் புதிய கல்விக்கொள்கை – அமைச்சரவை ஒப்புதல் – அடுத்தது தமிழ்நாடு

ஐ.ஐ.டி களில் மாணவர் சேர்க்கை, பேராசிரியர் நியமனம் ஆகிய இரண்டிலும் இடஒதுக்கீடு அமலாக்கம் குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் சட்டப்பூர்வமான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்பட வேண்டும்; அவ்வாறு அமல்படுத்தாத, அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு, உரிய வழிகாட்டுதல்கள் ஐஐடிகளுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் கிடையாது: மமதா பானர்ஜி

மேலும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின், இளைஞர்களின் எதிர்காலம் குறித்த ஏக்கங்களுக்கு உரிய கவனம் அளித்து அவர்கள் மனங்களில் நம்பிக்கையை விதைக்கும் வண்ணம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்கு அனுப்பிய கடித்த்தில் மதுரை மக்களவை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்