Aran Sei

‘கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான பட்ஜெட்’ – தி. வேல்முருகன் விமர்சனம்

டப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான பட்ஜெட் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் என்பது நாட்டின் வேளாண் வளர்ச்சியை எந்த வகையிலும் மேம்படுத்தாது. வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவதெல்லாம், வார்த்தை ஜாலமே தவிர,  நாட்டின் வளர்ச்சிக்கோ, மக்களின் வாழ்வாதாரத்திற்கோ ஒன்றும் உதவாது.

சட்டப்பூர்வமாக்கப்படாத கிரிப்டோ கரன்சிக்கு வரி எதற்கு? – காங்கிரஸ் கேள்வி

கடந்தாண்டு 2021 – 2022ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது, வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக உரையாற்றிய நிதியமைச்சர், வேளாண் துறையை மேம்படுத்த எடுத்த திட்டங்கள் என்ன?. இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன?. வேளாண் துறையில் என்ன மாதிரியான மாற்றங்களை முன்னெடுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்க முடியாமா?.

டி.ஏ.பி, யூரியா போன்ற உரங்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாத ஒன்றிய அரசு, விவசாயிகள் குறித்து நீலி கண்ணீர் வடிப்பது , மக்களை ஏமாற்றும் செயல். வேளாண் வளர்ச்சி குறித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்தும் கவலைப்படும் ஒன்றிய அரசு, உரங்களுக்கு அளித்த மானியம் என்ன?.

பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசுத் தலைவரின் உரை பொய்களால் ஆனது – பினோய் விஸ்வம்

சிறு தானியங்கள், எண்ணெய் வித்துகள் உற்பத்தியை பெருக்குவதற்கும், அவற்றின் கொள்முதலை அதிகரிப்பதற்கும் என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளது ஒன்றிய அரசு?.

அதுமட்டுமின்றி, வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடும் போதுமானதாக இல்லை. கிராமப்புற ஊரக வேலை உறுதித் திட்ட நாட்களை 250ஆக உயர்த்த வேண்டும், ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. அதே போன்று, நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை.

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டில் கோரிக்கை எழுந்து வரும் இச்சூழலில், அதுகுறித்து கவலைப்படாத ஒன்றிய அரசு, காவிரி, கோதாவரி உள்ளிட்ட 5 நதிகளை இணைப்பதாக கூறுவது ஏமாற்று வேலை. அப்படி அத்திட்டத்தை சாத்தியப்படுத்தப் முயன்றாலும் கூட, அதனை செயல்படுத்த மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளாது.

‘அமெரிக்காவிலும் தலித்துகளுக்கு எதிராக தொடரும் சாதியப் பாகுபாடு’ – கலிபோர்னியா பல்கலைக்கழக முன்னாள் மாணவி குற்றச்சாட்டு

மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவுடன், ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஏழு ஆண்டுகளில் எத்தனை கோடி வேலை வாய்ப்புகளை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது?.

கடந்த காலங்களில் லட்சக்கணக்கானனோர் வேலை இழந்தது தான் மிச்சம். ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் என ஒன்றிய அரசின் பணிகளில், 8 இலட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வராத ஒன்றிய அரசு, மேக் இன் இந்தியா திட்டம் மூலம்  60 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது, அடுத்த நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறது.

கொரோனா காலத்தில் சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் அதிகளவில் முடப்பட்டு வரும் நிலையில், வேலையின்மை அதிகரித்துள்ளது.  இச்சூழலில், சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ. 2 லட்சம் கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுவது போதுமானதல்ல.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க வேண்டும் என்று அந்நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், அவர்களின் வேலைவாய்ப்பு கேள்வி குறியாகி உள்ளது. ஆயிரக்கணக்கோருக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் அந்நிறுவனம், மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனையெல்லாம் கவலைப்படாத ஒன்றிய அரசு,  நடப்பாண்டில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஏலம் விடப்படும் என்று அறிவித்துள்ளது. சமூக, பொருளாதார அடித்தளத்திற்கு முக்கியமான பங்களிப்பை செய்து வரும் எல்.ஐ.சி-யின் பங்குகளை விற்கவும் ஒன்றிய அரசு தீவிரமாக இருப்பதை இந்த பட்ஜெட்டின் வாயிலாக தெரிய வருகிறது.

தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, வருமான வரி உச்ச வரம்பு மாற்றமின்றி 2.5 லட்சம் ரூபாயாக தொடர்கிறது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

முக்கியமாக, 2022 – 2023 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மற்றொரு சலுகை. அந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் நலனை கருத்தில் கொண்டு தான், கார்ப்பரேட் கூடுதல் கட்டணம் 12 விழுக்காட்டில் இருந்து 7 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

68 விழுக்காடு ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம், நெடுஞ்சாலை திட்டம், 400- வந்தே பாரத் ரயில் திட்டம், அடுத்த 3 ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் அமைக்கும் திட்டம், டிஜிட்டல் கரன்சி, 5 ஜி வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் கருதி, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது.

குறிப்பாக, கொரோனா காலங்களில், வருவாய் இழப்பு, வேலையின்மை அதிகரிப்பு, விலை உயர்வு உள்ளிட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு, எந்த வித தீர்வையும், இந்த பட்ஜெட் ஏற்படுத்தவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்