Aran Sei

‘பத்ம பூஷன் விருதை ஏற்க போவதில்லை’- புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ள பத்ம பூஷன் விருதை அவர் ஏற்க மறுத்துள்ளார்.

இது குறித்து, நேற்று(ஜனவரி 25), புத்ததேவ் பட்டாச்சார்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விருதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் எனக்கு பத்ம பூஷன் விருது வழங்க முடிவு செய்திருந்தால், நான் அதை ஏற்க மறுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

புத்ததேவ் பட்டாச்சார்யா விருதை மறுத்ததன் பின்னணியில் உள்ள காரணங்களை விளக்குகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையில் இதுபோன்ற அரசின் விருதுகளை ஏற்கக்கூடாது என்று அக்கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா அதை ஏற்க மறுத்துவிட்டார். சிபிஐ(எம்) இன் கொள்கைகளின்படி அரசின் விருதுகளை ஏற்கக்கூடாது. எங்களின் பணி விருதுகளுக்காக அல்ல. மக்களுக்கானது. முன்னதாக, தோழர் இஎம்எஸ் (நம்பூதிரிபாட்) விருது வழங்கப்பட்டபோது, அதை நிராகரித்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான 77 வயதான புத்ததேவ் பட்டாச்சார்யா, 2000-2011ஆம் ஆண்டு வரை மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்தார். தற்போது வயது முப்பின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

“கம்யூனிஸ்டுகள் அரசின் விருதுகளுக்கு ஆசைப்படுவதில்லை. முன்னதாக, ஜோதிபாசுவுக்கு 2008 இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டபோது அவர் மறுத்துவிட்டார். ஆகவே, இது எதிர்பார்க்கப்பட்டதுதான்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

அக்கருத்தை எதிரொலிக்கும் வகையில் பேசியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா,
“மக்களை வகுப்புவாதரீதியாகப் பிரிக்கும் ஒரு அரசாங்கத்தின் விருதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மறுபுறம், நேற்று(ஜனவரி 25) அதிகாலை, புத்ததேவ் பட்டாச்சார்யாவின் பெயரை அறிவிப்பதற்கு முன்னர் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்குவதற்கான முடிவைப் பற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம், புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மனைவிக்கு தெரிவித்ததாகவும், அவரது குடும்பத்தினர் யாரும் அதை எதிர்க்கவில்லை என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source: ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்