Aran Sei

ஆதிவாசியின் உடைந்த மூக்கு – காவல்துறை வன்முறை குறித்து சொல்வது என்ன?

பான்சி ஹன்ஸ்தாவின் மூக்கில் போடப்பட்ட ஏழு தையல் வடுக்களும் சிறுக சிறுக மறைந்து வருகின்றன, ஆனால் அவரது கோபம் கொஞ்சம் கூட மறையவில்லை. அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும் இன்னும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை. காரணம் எளிமையானது, 40 வயதாகும் ஆதிவாசியான பான்சியை துப்பாக்கியின் பின்புறத்தைக் கொண்டு தாக்கியது இரண்டு காவலர்கள்.

போகாரோ மாவட்டத்திலிருக்கும் சுரங்க தளவாடங்கள் உற்பத்தி ஆலையில் பணியை முடித்துக்கொண்டு, டிசம்பர் 12 ம் தேதி மாலையில் தவையா கிராமத்தை சேர்ந்த ஹன்ஸ்தா, தனது மிதிவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். காவல்துறை சோதனை சாவடி எதிர்ப்படுவதைக் கண்ட ஹன்ஸ்தா, மரியாதை நிமித்தமாக மிதிவண்டியிலிருந்து இறங்கி தள்ளிக்கொண்டே நடந்து சென்றார்.சில கேள்விகள் கேட்ட பின்னர் அவரை காவலர்கள் விட்டுவிட்டனர்.

`பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் மாவோயிஸ்டா?’ – பள்ளி ஆசிரியைக் கைது

சிறிது தூரம் நடந்த ஹன்ஸ்தா புக்கா சாலையின் ஓரம் சிறுநீர் கழிக்க ஒதுங்கினார். திடீரென தாடையில் பலத்த அடி ஒன்று விழுந்தது. “ஏன் விரைவாக செல்லாமல் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறாய்” என கேட்டுக்கொண்டே காவலர்கள் துப்பாக்கியைக் கொண்டு தாக்கி தன்னை தரையில் தள்ளியதாக ஹன்ஸ்தா தெரிவிக்கிறார்.

சுதாரித்து எழுந்து மிதிவண்டியை நிமிர்த்திய ஹன்ஸ்தா, கைகளை கட்டியவாறு “ஏன் என்னை தாக்கினீர்கள்” என்று காவலர்களைக் கேட்டிருக்கிறார். அதற்கு காவலர்கள் அவரது மூக்கின் மீது துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்கியிருக்கிறார்கள்.

ஹன்ஸ்தா தொட்டு பார்த்தபோது, மூக்கில் ரத்தம் வடிந்திருக்கிறது. ரத்தம் வடிய வடிய மிதிவண்டியை விரைவாக செலுத்தி 6 கி.மீ தள்ளியிருக்கும் தனது வீட்டையடைந்த ஹன்ஸ்தாவின் மூக்கில் ஏற்பட்டிருந்த காயத்தைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவரது மனைவி, பல் ஒன்றும் உடைந்திருப்பதை கண்டார்.

மருத்துவமனையில்

முஸ்கான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற ஹன்ஸ்தாவை, காவலர்கள் தேடிச்சென்றிருக்கிறார்கள். ஹன்ஸ்தா, மருத்துவரிடம் காவலர்கள் தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக சொல்லிவிட்ட நிலையில், காவலர் சிங் ஹன்ஸ்தா பொய் சொல்வதாக திரும்ப திரும்ப சொன்னதுமில்லாமல் பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் இருக்குமாறும் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார். சொன்னதோடு முதற்கட்ட சிகிச்சை கட்டணம் 5000 ரூபாயை சிங் கட்டியிருக்கிறார்.

ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்கு தனிமத அடையாளம் – விபரங்கள்

ஹன்ஸ்தாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர் இர்ஃபான் அன்சாரியை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவரது உதவியாளர் அக்பர் அன்சாரியால் முதற்கட்ட சிகிச்சை கட்டணத்தை செலுத்தியது யாரென்று உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் ஹன்ஸ்தாவின் மருத்துவ அறிக்கையை, சாஸில் இருக்கும் காவல் நிலையத்துக்கு அனுப்பியதை அக்பர் அன்சாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

மறுநாள் ஹன்ஸ்தாவை மருத்துவமனையில் காவலர்கள் விசாரணை செய்த நிலையில், அவரது ஊர்த்தலைவர், அவரது குடும்பத்தை சந்தித்து காவல்துறையுடன் சமாதானப் பேச்சுவார்த்தை செய்து வைக்க முயற்சித்ததோடு, 50,000 ரூபாய் சிகிச்சை செலவுக்காக தர முன்வந்ததாக, பான்சி ஹன்ஸ்தாவின் சகோதரர் ராஜேஷ் ஹன்ஸ்தா தெரிவிக்கிறார்.

ஊர்த்தலைவர் குரு பிரசாத்தை, சிங் தொலைபேசியில் அழைத்து, ஹன்ஸ்தா குடும்பத்திடம் பேச கேட்டுக்கொண்டதை பிரசாத்தே கூறியுள்ளார். ஆனால் ஹன்ஸ்தாவின் குடும்பம் தவறான குற்றசாட்டை கொடுக்கக்கூடாது என்று சொல்வதற்காகவே சந்தித்ததாக பிரசாத் கூறுகிறார். மேலும், நிகழ்வின் போது ஹன்ஸ்தா மது அருந்தியிருந்ததாகவும், காவலர்கள் அடித்ததாக ஒரு நிகழ்வே நடக்கவில்லையெனவும் சொன்ன அவர், ஹன்ஸ்தாவின் சகோதரர் பணம் கேட்டதால் தான், பணத்தை வாங்கி கொடுக்க முடிவு செய்ததாக கூறுகிறார்.

ராஜேஷ் ஹன்ஸ்தா இதை மறுத்துள்ளார். சிகிச்சை கட்டணம் 25,000 ரூபாயை உள்ளூர் மகளிர் சுய உதவி குழுவிடமிருந்து பெற்று தன் குடும்பம் தான் செலுத்தியதாக தெரிவித்துள்ள ராஜேஷ், ஊர்த்தலைவர் பிரசாத், ஆதிக்க சாதியான மஹதோவை சேர்ந்தவர் என்றும், காவல்துறையோடு அவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சரின் தலையீடு

பான்சி ஹன்ஸ்தா மருத்துவமனையிலிருந்து வெளியேறிய டிசம்பர் 15 அன்று, ஜார்கண்ட் ஜனதிகர் மகாசபா எனும் சிவில் உரிமை அமைப்பு, முதலமைச்சர் ஹேமந்த் சோரனை டிவிட்டரில் இணைத்து “ஆதிவாசிகள் இதுபோல இன்னும் எவ்வளவு காலம் ஒடுக்கப்படுவார்கள்?” என்று கேட்டிருந்தனர்.

ஜார்க்கண்டின் மக்கள்தொகையில் 26% இருக்கும் ஆதிவாசிகளின் பிரதிநிதியாக சொல்லிக்கொள்ளும் ஹேமந்த் சோரனின் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, எதிர்க்கட்சியாக இருந்தபோதே ஆதிவாசிகளுக்கெதிரான காவல்துறை வன்முறை வழக்குகளில் கவனம் செலுத்தியது. டிசம்பர் 2019ல் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக, பதல்காடி இயக்கத்துக்காக ஆதிவாசிகள் மீது காவல்துறையால் போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளை திரும்பப் பெற்றது.

பழங்குடி மக்களுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதிய பாஜக தலைவர் – கட்சியிலிருந்து திடீர் விலகல்

ஜனதிகார் மகாசபையின் ட்வீட்டுக்கு உடனடியாக பதிலளித்த சோரன், பொகாரோ காவல்துறை உடனடியாக ஹன்ஸ்தாவின் வழக்கை விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

ஆனால், அதன்பின்னும் காவல்துறை ஹன்ஸ்தாவை இரண்டு வாரங்களுக்கு தொடர்பு கொள்ளவில்லை.

டிசம்பர் 29ல் காவல்நிலையத்துக்கு சென்று ஹன்ஸ்தா, இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்தும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.

ராஜேஷ் ஹன்ஸ்தாவும் உடன் சென்றிருந்த நிலையில், காவல் கண்காணிப்பாளரிடம் பேசிய பிறகே வழக்கு பதிய முடியும் என்று சொல்லி திருப்பியனுப்பியிருக்கிறார்கள். ஹன்ஸ்தாவின் குடும்பம் ஆன்லைனில் புகாரளிக்க முயற்சித்த போது, காவல்துறை வலைதளத்தில் சம்பந்தப்பட்ட காவல்நிலையமே இல்லாமல் இருந்திருக்கிறது.

ஜனவரியில் காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பாளருக்கு விரைவு தபாலில் மற்றொரு புகாரை ஹன்ஸ்தா அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. மாவட்ட நிர்வாகத்திடமிருந்து இழப்பீடும் கிடைக்கவில்லை.

ஜனதிகார் மகாசபாவின் சிராஜ் தத்தா,” ஒரு வழக்கு புலனாய்வில் முதல் தகவல் அறிக்கை மிகவும் அவசியம், அது இல்லாமல் எவ்வாறு குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவோ முடியும்? ” என்று கேட்கிறார்.

ஆட்சி மாறினாலும் ஆதிவாசிகள் மீதான காவல்துறை வன்முறை தொடர்வதாக கூறும் தத்தா, ஜூன் 2020 ல் மேற்கு சிங்பும்மில் இருக்கும் அஞ்செட்பேடா கிராமத்தில் துணை ராணுவப்படை வீரர் ஒருவர் நக்சல் தொடர்பு இருப்பதாகக் கூறி 20 ஆதிவாசிகளை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. நக்சல் தொடர்புகளை ஆதிவாசிகள் மறுத்த நிலையில் தத்தா அந்த கிராமத்துக்கு சென்று அந்த நிகழ்வு குறித்து அறிக்கை ஒன்றை எழுதியிருக்கிறார்.

டிவிட்டரில் காவல்துறை வன்முறைக்கெதிராக உடனடியாக முதலமைச்சர் சோரன் பதிலளித்த போதும் அது களத்தில் நடவடிக்கையாக உருமாறவில்லை என்று கூறும் தத்தா, பதால்கடி வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும் 60% வழக்குகள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளதை குறிப்பிடுகிறார்.

நிலுவையில் முதல் தகவல் அறிக்கை

உதவி ஆய்வாளர் சுமன் குமார் சிங் மற்றும் இரண்டு காவலர்கள் ஹன்ஸ்தாவின் புகாரையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக
பெங்க் நாராயண்பூர் காவல் நிலைய அதிகாரி அருண்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என கேட்டதற்கு புலனாய்வு முடிந்த பிறகே பதிவு செய்ய முடியும் என்று அருண்குமார் பதிலளித்திருக்கிறார். முதல் தகவல் அறிக்கை தானே புலனாய்வின் முதல்படி? அதை ஏன் காவல்துறை செய்யவில்லை? என கேட்டதற்கு “எதற்காக காவலர்கள் அவரை அடிக்க போகிறார்கள்? அவர் மது அருந்திவிட்டு, மிதிவண்டியிலிருந்து தவறி விழுந்துவிட்டு காவலர்கள் அடித்ததாக தவறான புகாரளித்தால் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமா? என வெடித்து பேசுகிறார்.

இதை முற்றிலுமாக மறுக்கும் பான்சி ஹன்ஸ்தா “நான் அவ்வளவு முட்டாளில்லை, விழுவதாக இருந்தாலும் அங்கே போய் ஏன் விழப்போகிறேன்? நான் என்ன நிலையில் வீடு திரும்பினேன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்” என்கிறார்.

அவரது சகோதரர் ராஜேஷ் ஹன்ஸ்தா “இம்முறை எனது சகோதரருக்கு நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம், என் சகோதரன் மீது தவறில்லை, எங்களுக்கு நீதி வேண்டும்” என்கிறார் இறுதியாக.

(www.scroll.in இணையதளத்தில் விஜய்தா லால்வானி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்