Aran Sei

அமெரிக்காவின் அக்கிரமங்களை எதிர்த்த அசாஞ்சேவுக்கு வெற்றி – நாடு கடத்த முடியாது என பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஜூலின் அசாஞ்சேவை, அமெரிக்காவிற்கு நாடு கடத்தக் கூடாது என்று பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வனேசா பரைட்சர், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையதளம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் பற்றிய ஆயிரக்கணக்கான ஆவணங்களையும் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் செய்தி பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களையும், 2010 தொடங்கி 2011 வரை வெளியிட்டு வந்தது.

ஒத்திகை தடுப்பூசி முகாம்கள் என்றால் என்ன? – இதை நடத்த காரணம் என்ன?

இதைத்தொடர்ந்து, அமெரிக்க அரசு அசாஞ்சே மீது, உளவு பார்த்தது, அரசாங்கத்தின் கணிணியை ஹாக் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை ஆய்வாளராக பணியாற்றிய செல்சியா மேனிங் என்பவர், கணிணிகளை ஹாக் செய்ய அசாஞ்சே உதவியதாகவும், அதன் மூலம் கிடைத்த ரகசிய ஆவணங்களை அசாஞ்சே பொதுவெளியில் வெளியிட்டதாகவும், அரசு தரப்பில்  அசாஞ்சே மீது குற்றம்சாட்டப்பட்டது. இதன் மூலம், அமெரிக்காவின் உளவு பார்த்தலுக்கு எதிரான சட்டத்தை அசாஞ்சே மீறியுள்ளதாகவும், அசாஞ்சேவின் செயலால் சிலரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

செல்சியா மேனிங்குடன் சேர்ந்து திட்டமிட்டு, அமெரிக்க கணிணிகளின் ரகசிய கடவுச் சொற்களை (Password) உடைத்ததாக தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அசாஞ்சே தரப்பில் வாதிடப்பட்டது. அத்துடன், தன்னுடைய செயலால் யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும் அவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கடவுளின் பெயரால் நடைபெறும் ஆட்சிக்கு தயாராகிறதா இந்தியா? – ராஜ்ஸ்ரீ சந்திரா

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள், அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்ததால், தன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் இவ்வாறு பொய் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக, அசாஞ்சே தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

விசாரணையின் போது, அசாஞ்சே தரப்பில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சாட்சிகள், விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா எவ்வாறு போரை நடத்தியது என்பதை வெளிச்சம்போட்டு காட்டியதாக கூறினர்.

ரெப்ரைவ் என்ற சட்ட உதவி அறக்கட்டளையின் நிறுவனர், கிளைவ் ஸ்டாஃபர்ட் ஸ்மித் என்பவர், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் (Drone), பாகிஸ்தானில் குறிப்பிட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது “மிகப்பெரிய சட்ட மீறல்” என்பதை, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியான ஆவணங்கள், வெளிச்சம் போட்டு காட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

வியட்நாம் போர் குறித்த பென்டகன் (அமெரிக்க ராணுவ தலையமையகம்) ஆவணங்களை வெளியிட்ட, டானியல் எல்ஸ்பெர்க் என்பவரும் அசாஞ்சேவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அசாஞ்சே, மக்கள் நலனுக்காக செயல்பட்டார் என்றும், அமெரிக்காவில் அவருக்கு நீதி கிடைக்காது என்றும் டானியல் எல்ஸ்பெர்க் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதேபோல், அசாஞ்சேவுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்று, உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர், அசாஞ்சேவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அநீதியை எதிர்த்து நிற்கும் குடிமகனே இந்த ஆண்டின் சிறந்த இந்தியன் – சித்தார்த் பாட்டியா

லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த ஜூலியன் அசாஞ்சே 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அசாஞ்சேவுக்கு எதிராக ஸ்வீடனில் பாலியல் வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பிக்க ஈக்குவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்த அசாஞ்சே, அங்கு 7 ஆண்டுகளை கழித்தார்.

ஸ்வீடனில் அசாஞ்சேவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்குகளை, அந்நாடு கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(www.theguardian.com இணையதளத்தில் வெளியான செய்தியைத் தழுவி எழுதப்பட்டது)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்