Aran Sei

அசாஞ்சேவுக்கு ஜாமீன் மறுப்பு – அமெரிக்கா மேல்முறையீடு செய்துள்ளதால் நடவடிக்கை

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டன் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை அசாஞ்சே சிறையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி வனேசா பரைட்சர் உத்தரவிட்டுள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையதளம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் பற்றிய ஆயிரக்கணக்கான ஆவணங்களையும் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் செய்தி பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களையும், 2010 தொடங்கி 2011 வரை வெளியிட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து, அமெரிக்க அரசு அசாஞ்சே மீது, உளவு பார்த்தது, அரசாங்கத்தின் கணிணியை ஹாக் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது.

அமெரிக்காவின் அக்கிரமங்களை எதிர்த்த அசாஞ்சேவுக்கு வெற்றி – நாடு கடத்த முடியாது என பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை ஆய்வாளராக பணியாற்றிய செல்சியா மேனிங் என்பவர், கணிணிகளை ஹாக் செய்ய அசாஞ்சே உதவியதாகவும், அதன் மூலம் கிடைத்த ரகசிய ஆவணங்களை அசாஞ்சே பொதுவெளியில் வெளியிட்டதாகவும், அரசு தரப்பில்  அசாஞ்சே மீது குற்றம்சாட்டப்பட்டது. இதன் மூலம், அமெரிக்காவின் உளவு பார்த்தலுக்கு எதிரான சட்டத்தை அசாஞ்சே மீறியுள்ளதாகவும், அசாஞ்சேவின் செயலால் சிலரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த உத்தரவிட வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த ஜனவரி 4ஆம் தேதி நீதிபதி  தள்ளுபடி செய்த நீதிபதி வனேசா பரைட்சர், அமெரிக்காவின் கடுமையான சிறை நிலைமைகளில் அசாஞ்சே அடைக்கப்பட்டால், அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அசாஞ்சேவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ள நீதிபதி வனேசா பரைட்சர், ஜாமீன் வழங்கினால் அசாஞ்சே தலைமறைவாவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த ஜூலியன் அசாஞ்சே 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அசாஞ்சேவுக்கு எதிராக ஸ்வீடனில் பாலியல் வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பிக்க ஈக்குவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்த அசாஞ்சே, அங்கு 7 ஆண்டுகளை கழித்தார்.

ஸ்வீடனில் அசாஞ்சேவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்குகளை, அந்நாடு கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: PTI and The Guardian

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்