இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 5.6 கோடி மக்கள் கொரோனா பொதுமுடக்கத்தில் வைக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகப் பிப்ரவரி மாத நடுப்பகுதி வரை இந்தப் பொதுமுடக்கம் தொடர வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இங்கிலாந்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அங்கு சுமார் 4.4 கோடி மக்கள் அல்லது முக்கால்வாசி பேர் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்கின்றனர். தொற்று மேலும் அதிகரித்ததற்கு காரணம் உருமாறிய கொரோனா வைரஸ்தான் என்று கூறப்பட்டது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 27,000 பேர் மருத்துவமனையில் இருப்பதாகப் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பாதிப்புடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும்.
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற சோதனையின் போது வெறும் 24 மணி நேரத்தில் 80,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
“நாட்டில் பெரும்பாலானோர் ஏற்கனவே தீவிர கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், உருமாறிய கொரோனாவுக்காகத் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் வரை நாம் ஒன்றிணைந்து மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது” என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
“எனவே, இங்கிலாந்தில் நாம் ஒரு தேசிய பொதுமுடக்கத்தில் இருக்க வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிய நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து ஜூன் வரை இருந்த முதல் பொதுமுடக்கத்தை போல் இருக்கும்.
இதன்படி, பள்ளிகள் மூடப்படும், முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை பணிகள் நடைபெறும், உடற்பயிற்சி, அத்தியாவசிய பொருட்களை வாங்குதல் மற்றும் மருத்துவ தேவைக்காக மட்டுமே வெளியே செல்வார்கள் என்று இங்கிலாந்துபிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.