Aran Sei

“கழிவறைக்குக் கூடச் செல்லமுடியாமல் உள்ளார் வரவர் ராவ்” – மருத்துவ பரிசோனைக்கு நீதிமன்றம் உத்தரவு

Credits New Indian Express

மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் வரவர் ராவுக்கு காணொலி மூலம் மருத்துவ பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 81 வயதான எழுத்தாளர், கவிஞர் வரவர ராவ் மகாராஷ்டிராவில் நடந்த பீமா கோரேகான் வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 2018 ஆம் ஆண்டு மும்பை டலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

பீமா கோரேகான் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், வரவர் ராவ் இரண்டு ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளார்.

அவருடைய உடல்நிலை காரணமாக உடனடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டி, வரவர் ராவின் மனைவி ஹேமலதா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிறையிலிருந்து நானாவதி மருத்துவமனைக்கு வரவர் ராவ் மாற்றப்பட வேண்டும் எனவும்  மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைபடுத்தப்பட்டுள்ள ஸ்டேன் சாமி, வரவர் ராவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக கூறியுள்ளார் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

சிந்திக்கும் திறன் இழந்து, கழிவறை செல்லக்கூட முடியாமல், சிறுநீர் பை பொருத்தப்பட்டு, அதுவும் முறையாக மாற்றப்படாமல், சரியான பராமரிப்பின்றி மனித நேயமற்ற முறையில் சிறையில் வரவர ராவ் இழிவாக நடத்தப்படுகிறார் என்று இந்திரா குற்றம் கூறியதாக லைவ் லா  செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே மேனன், எஸ்.பி.தவடே அமர்வு வரவர ராவுக்கு உடனடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள  உத்தரவிட்டுள்ளது.

வரவர் ராவ் சிகிச்சை பெற்று வந்த நானாவதி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் இன்று அல்லது நாளை இந்தப் பரிசோதனையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

காணொலி வழி பரிசோதனை போதாது என்று மருத்துவக் குழு கருதினால் டலோஜா சிறக்குச் சென்று நேரடியாக பரிசோதனை மேற்கொண்டு நவம்பர் 16-ம் தேதி மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வரவர் ராவுக்கு இதற்கு முன் சிகிச்சை அளித்த அதே மருத்துவர்கள் தான் தற்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

வரவர் ராவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்