Aran Sei

ஈராக்கில் குழந்தைகளை சுட்டுக்கொன்ற ராணுவத்தினர் – விடுதலை செய்ய உத்தரவிட்ட டிரம்ப்

ராக்கில், இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேரை கொன்ற ஒப்பந்த இராணுவ வீரர்களை, டொனால்ட் ட்ரம்ப் விடுதலை செய்துள்ளார் என தி கார்டியன்  செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்க அரசு பாதுகாப்பு சேவைகளுக்கு என தனியார் இராணுவ அமைப்பான, ப்ளாக்வாட்டர் செக்யூரிட்டி கன்சல்டிங்கை (Blackwater Security Consulting) பணியமர்த்தியிருந்தது. 2007 ஆம் ஆண்டு,  ஈராக்கின் பாக்தத்தில் உள்ள நிசௌர் சதுக்கத்தில், அமெரிக்க தூதரக வாகனங்களுக்கு காவலாக சென்று கொண்டிருந்த போது, ப்ளாக்வாட்டரின் காவல்படையை சேர்ந்தவர்கள், உள்ளூர் மக்கள் 17 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமடைந்தனர். 

டொனால்ட் டிரம்ப் – உள்நாட்டு கலகத்தை மூட்டும் அதிபர்

ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் நிசௌர் சதுக்கத்தில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது, தனியார் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பால் ஸ்லோ, எவன் லிபர்டி, டஸ்டின் ஹெர்ட் மற்றும் நிகோலஸ் ஸ்லேட்டன் ஆகிய நால்வர், இயந்திர துப்பாக்கிகளையும், ஸ்னைப்பர் துப்பாக்கிகளையும், எறிகுண்டுகளையும் வைத்து தாக்குதல் நடத்தயதாக தி கார்டியன் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தலைமையில், ஈராக், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போது நடந்த மிகக் கொடூரமான நிகழ்வு இது என்கிறது தி கார்டியன். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்லோ, லிபர்டி மற்றும் ஹெர்ட் குற்றவாளிகள் என 2014ல் தீர்ப்பளிக்கப்பட்டது. ஸ்லேட்டன், முதலில் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதால், (முதல் நிலை) கொலை குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. 

 “குற்றவாளிகளின் செயலால், 2007 செப்டம்பர் 16 அன்று ஏற்பட்ட அநாவசிய உயிரிழப்பும், வலியும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது” என இவ்வழக்கு விசாரணையின் போது அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்தது. 

சிறப்புத் தகுதியை இழக்கிறார் டிரம்ப் – பதிவுகளை அகற்ற டிவிட்டர் முடிவு

தனியார் காவல்படையின் சார்பாக, ஈராக்கின் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த மறைந்திருந்ததால் தான் துப்பாக்கி சூடு தொடங்கியது என்றொரு வாதம் வைக்கப்பட்டது. தீர்ப்புக்கு பிறகு, இச்சம்பவம் பற்றி குறிப்பாணையை பதிவு செய்த அமெரிக்க அரசாங்கம், “கொல்லப்பட்டவர்களில் யாரும் கிளர்ச்சியாளர்கள் இல்லை. அவர்கள் யாரும் காவல்படைக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை” என்று கூறியது.

இந்த நிகழ்வில், தன்னுடைய ஒன்பது வயது மகன் கொலை செய்யப்பட்டது குறித்து மொஹமது கினானி என்பவர், “அந்த நாள் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. என்னை முற்றிலுமாக சிதைத்துவிட்டது” எனக் கூறியதும் குறிப்பாணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல், ஆஃப்கானிஸ்தானில், வெடிகுண்டு தயாரிப்பதாக சந்தேகப்பட்டு ஒரு நபரை சுட்டுக் கொன்ற அமெரிக்க ராணுவ கமாண்டோ ஒருவரையும், ஆஃப்கான் மக்கள் மூவரை சுடச் சொல்லி ஆணையிட்ட முன்னாள் இராணுவ அதிகாரியையும் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்