Aran Sei

‘உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கையில் இருந்து இந்தியா வெளியேறுவதே தீர்வு’- பாரதிய கிசான் யூனியன்

விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகள் போராட்டம் ஓர் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி, டெல்லி திக்ரி எல்லையில் ‘விவசாயிகளின் மகாபஞ்சாயத்து’ கூட்டம் நடைபெற்றுள்ளது.

போராடும் விவசாயிகள் சங்கங்களில் பெரிய விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் யூனியனின் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில கமிட்டி, திக்ரி எல்லையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளது. கடந்த ஓரராண்டு விவசாயிகளில் போராட்டத்தில், உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.

அப்போது, உயிரிழந்த விவசாயிகளின் நினைவைப் போற்றும் வகையில், கவிஞர் சந்த் ராம் உதாசி எழுதிய பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ஜோகிந்தர் சிங், “விவசாயச் சட்டங்களை ரத்து செய்தது ஒரு வரலாற்று வெற்றி. இது விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் ஒற்றுமையுடன் உலகளாவிய ஆதரவால் சாத்தியமானது. அனைத்துப் பயிர்களையும் லாபகரமான குறைந்தபட்ச ஆதரவு விலையிலும் உலகளாவிய பொது விநியோகத் திட்டத்தின்கீழும் கொள்முதல் செய்வதற்கான கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என்று நினைவுபடுத்தியுள்ளார்.

இந்தக்கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு மவுனம் காத்து வருவதாகக் கூறியுள்ள அவர், நாடாளுமன்றத்தில் சட்டங்களை முறையாக ரத்து செய்து, பிற கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்ட பிறகே போராட்டத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பாரதிய கிசான் யூனியனின் பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கோக்ரி கூறுகையில், “உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளை செயல்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதால், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் உலகளாவிய பொது விநியோகத் திட்டம் கீழ் கொள்முதல் போன்ற கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை. விவசாய சட்டங்கள் இந்த கொள்கைகளின் ஒரு பகுதியாகும். ஆகவே, உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கையில் இருந்து இந்தியா வெளியேறுவதில்தான் உண்மையான தீர்வே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்