Aran Sei

ஓராண்டை நிறைவு செய்யும் விவசாயிகள் போராட்டம்: ‘அரசு அலுவலகங்களை தானிய சந்தைகளாக மாற்றுவோம்’ – ராகேஷ் திகாயத் எச்சரிக்கை

வம்பர் 26 ஆம் தேதிக்குள் மூன்று விவசாயச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறாவிட்டால், டெல்லி எல்லைகளில் போராட்டம் தீவிரமடையும் என்று போராடும் விவசாயிகள் சங்கங்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று(நவம்பர் 1), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகேஷ் திகாயத், “நவம்பர் 26 ஆம் தேதி வரை ஒன்றிய அரசுக்கு அவகாசம் உள்ளது. அதன்பிறகு நவம்பர் 27 முதல், விவசாயிகள் கிராமங்களில் இருந்து டிராக்டர்கள் மூலம் டெல்லியைச் சுற்றியுள்ள போராட்டக் களங்களுக்கு வருவார்கள். போராட்டக்களங்களை உறுதிமிக்க கோட்டையை போல பலப்படுத்துவார்கள்” என்று எச்சரித்துள்ளார்.

இரண்டு நாட்களில் ஒன்றிய அரசுக்கு ராகேஷ் திகாயத் விடுத்த இரண்டாவது எச்சரிக்கை இதுவாகும். டெல்லி எல்லையில் இருந்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நேற்று(அக்டோபர் 31) ஒன்றிய அரசை எச்சரித்திருந்தார்.

மேலும், “டெல்லி எல்லைகளில் இருந்து விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சித்தால், அவர்கள் நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களை தானிய சந்தைகளாக மாற்றுவார்கள். போராட்டக்களங்களில் இருந்து விவசாயிகளின் கூடாரங்களை அகற்ற முயன்றால், விவசாயிகள் காவல் நிலையங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கூடாரம் அமைப்பார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்