Aran Sei

‘பெங்களூருவில் ஒரு டெல்லியை நிகழ்த்துங்கள்; நாற்திசையில் இருந்தும் முற்றுகையிடுங்கள்’ : விவசாயிகள் சங்கம் அழைப்பு

டெல்லியில் நடைபெற்றது போலவே, கர்நாடகா மாநிலத்திலும் போராட்டங்களை ஒருங்கிணைத்து, மாநிலத் தலைநகர் பெங்களூருவை எல்லா திசைகளில் இருந்தும் முற்றுகையிடுங்கள் என்று அம்மாநில விவசாயிகளை பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாய்த் கோரியுள்ளார்.

நேற்று (மார்ச் 20), கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய ராகேஷ் திகாய்த், விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிக்கும் நோக்கிலேயே திட்டம் தீட்டப்படுகிறது என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

“டெல்லியை லட்சக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்னும் நீண்ட காலத்திற்கு தொடரும். இந்த மூன்று விவசாய விரோத சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரையிலும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் வரையிலும், இந்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் இது போன்ற போராட்டத்தைத் தொடங்க வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘ஹோலி பண்டிகை அன்று கொளுத்தப்படும் விவசாய சட்ட நகல்’ : பாரத் பந்திற்கு ஆதரவு கோரும் விவசாயிகள்

மேலும், “நீங்கள் கர்நாடகாவில் இதுபோன்றதொரு போராட்டத்தை நடத்த வேண்டும். உங்கள் நிலங்களைப் பறிக்க ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்கள் விவசாயம் செய்யும். நம்மிடம் இருந்து மலிவான உழைப்பைப் அவர்களுக்குப் பெற்று தரத் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.” என்று ராகேஷ் திகாய்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீங்கள் பெங்களூருவில் ஒரு டெல்லியை நிகழ்த்திக்காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியவர், “நீங்கள் அனைத்து திசைகளிலிருந்தும் (டெல்லியில் நடந்தது போல) பெங்களூருவை முற்றுகையிட  வேண்டும். மக்கள் தாங்களாக வந்து உங்கள் போராட்டத்தில் இணைவார்கள்.” என்று நம்பிக்கையளித்துள்ளார்.

“விவசாயிகள் பயிர்களை எங்கும் விற்பனை செய்யலாமென பிரதமர் மோடியே அனுமதியளித்திருக்கிறார். அதனால், உங்கள் பயிர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாஜிஸ்திரேட் அலுவலகம் போன்றவற்றுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யுங்கள். காவல்துறையினர் உங்களைத் தடுத்தால், அவர்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பயிர்களை வாங்கச் சொல்லுங்கள்.” என்று ராகேஷ் திகாய்த் ஆலோசனையளித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத் திறக்க கோரும் விவசாயிகள் – ஏற்கமறுக்கும் மத்திய அரசு

“இந்த விவசாயிகள் போராட்டங்கள் நடத்தப்படாவிட்டால், இந்நாடு விரைவில் விற்கப்படும். அடுத்த 20 ஆண்டுகளில் உங்கள் நிலங்களை இழந்து நிற்பிர்கள். சுமார் 26 பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளன. இதை நிறுத்த நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். எதிர்த்து போராட வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்