“மத்திய அரசு உங்களை பஞ்சாப் என்றும் ஹரியானா என்றும், சீக்கியர் என்றும் சீக்கியர் அல்லாதோர் என்றும், இந்து என்றும் இஸ்லாமியர் என்றும் பிரிக்க முயற்சி செய்யும், கவனமாக இருங்கள்” என்று பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை ஆதரித்து பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகளின் மகாபஞ்சாயத்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினம், ஹரியானா மாநிலத்தின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் மகாபஞ்சாயத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், பேசிய பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாயத், ”மத்திய அரசு, உங்களை பஞ்சாப் என்றும் ஹரியானா என்றும், சீக்கியர் என்றும் சீக்கியர் அல்லாதோர் என்றும், இந்து என்றும் இஸ்லாமியர் என்றும் பிரிக்க முயற்சி செய்யும், கவனமாக இருங்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், நிச்சயம் வெற்றி பெறலாம்” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்: மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையம்
இந்தப் போரட்டம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே நடப்பது போன்ற ஒரு தவறான தோற்றத்தை அரசு கட்டமைக்க முயல்கிறது என்று குற்றம் சாட்டிய திகாயத், விவசாயச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 8-2-21 அன்று, மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி,” கடந்த சில ஆண்டுகளில் அந்தோலன் ஜீவி (தொழில் முறை போராட்டக்காரர்கள்) எனும் புதிய இனம் உருவாகியுள்ளது. அவர்களை நீங்கள் அனைத்து போராட்டத்திலும் பார்க்கலாம். அவர்கள் உண்மையில் ஒட்டுண்ணிகள், அவர்களிடமிருந்து இந்த தேசத்தை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
புதிய வேளாண் சட்டங்கள் – வருமான வரி வலைக்குள் சிக்க உள்ள விவசாயிகள்
இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த பேசிய ராகேஷ் திகாயத் “இந்த தேசத்திற்காக உயிரை விட்ட பகத் சிங் ஒட்டுண்ணியா? அல்லது இந்த விவசாய போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்துள்ள 150 பேர் ஒட்டுண்ணியா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
’ஷாஹீன் பாக்கை ஒடுக்கியது போல் எங்களை ஒடுக்க முடியாது’ – வேகமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்
டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் இன்னும் அதிகமானோர் கலந்துக்கொள்ள வேண்டும் என கூறிய அவர், சட்டங்களை திரும்பி பெறும் வரை வீடு செல்லும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.