Aran Sei

” ‘லவ் ஜிகாத்’, மாட்டிறைச்சி குறித்து கருத்து சொல்ல முடியாது ” – நேர்காணலை விட்டு வெளியேறிய கேரள பாஜகவின் மெட்ரோமேன் ஈ ஶ்ரீதரன்

image credit : ndtv.com

பாஜகவின் கேரளா முதலமைச்சர் வேட்பாளராகக் கருதப்படும் ஈ ஶ்ரீதரன், வட இந்தியாவில் பாஜகவின் முக்கிய அரசியல் பிரச்சார பிரச்சினைகளான “லவ் ஜிகாத்”, “மாட்டிறைச்சி” போன்ற விவகாரங்களில் தான் கருத்து சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

நியூஸ் லாண்ட்ரி ஶ்ரீதரனுடன் நடத்திய நேர்காணலின் போது, இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்து நேர்காணலை முடித்துக் கொள்வதாக கூறியுள்ளார், அவர்.

கொச்சி, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை தலைமை வகித்து அமல்படுத்தியதன் மூலம்  “மெட்ரோ மேன்” என்று புகழ் பெற்ற ஶ்ரீதரன், வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவிருக்கும் கேரளா சட்டப் பேரவை தேர்தலை ஒட்டி, சென்ற மாதம் பாஜகவில் இணைந்துள்ளார்.

அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக கருதப்படும் அவர் தனது சொந்த ஊரான பாலக்காடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்று நியூஸ் லாண்ட்ரி தெரிவிக்கிறது.

கேரளாவின் ஆளும் கட்சியான சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இரண்டின் மீதும் தான் கடும் வெறுப்பில் இருப்பதால், அரசியலுக்கு வருவது என்று முடிவெடுத்த பிறகு, பாஜகவில் சேர்ந்ததாக நியூஸ் லாண்ட்ரியுடனான நேர்காணலில் ஶ்ரீதரன் கூறியுள்ளார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 7 ஆண்டுகளில், நாட்டின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது, இந்தியாவின் தரவரிசை எண்கள் சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. எனவே, தான் பாஜகவில் சேர முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயக குறியீடு: 53வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா – 6 ஆண்டுகளில் 26 இடங்கள் பின்னடைவு

நாட்டின் பொருளாதார நிலைமை உயர்ந்துள்ளது, ஜி.எஸ்.டி போன்ற சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியா 4-வது வலுவான ராணுவத்தைக் கொண்ட, வலுவான நாடாக உள்ளது என்றும் தான் பாஜகவில் சேர்வதற்கான காரணமாக அவர் கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி – 100 நாள் வேலைத் திட்டத்தில் மாதம் 2 கோடி குடும்பங்கள்

மேலும், தனக்கு பாஜக மீது எப்போதுமே ஒரு அபிமானம் இருந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது குடும்பம் மதப்பற்றுள்ளது என்றும் மதம் தனது இரத்தத்திலேயே உள்ளது என்றும் பின்னர் தான் ஆன்மீகத்தில் இறங்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பகவத் கீதை, தியானம் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், சபரிமலை பிரச்சினையில், பெண்கள் கோயிலுக்குள் செல்வதை எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டை பாஜக எடுத்ததற்கும் தான் அக்கட்சியில் சேர்வதற்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளார். அரசியலில் நுழைவது என்று முடிவு எடுத்த பிறகு பாஜகவில் மட்டுமே தான் சேர்வது என்பதில் தெளிவாக இருந்ததாக ஶ்ரீதரன் கூறியுள்ளார்.

” கேரளாவில் பாஜக வளராததற்கு காரணம் 90% கல்வியறிவு இருப்பதே ” – கேரளா பாஜக தலைவர்

 

பாஜக இந்துக்களுக்காக மட்டும் நிற்கவில்லை, அது எல்லோருக்குமான கட்சி. அவர்கள் இந்த நாட்டின் எல்லா மதங்களின் உணர்வுகளையும், மரபுகளையும் பாதுகாக்க விரும்புகின்றனர். இந்துக்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருப்பதால் அதற்கு அதிக கவனம் தருகிறது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அமித் ஷா, “ஒரு நாட்டுக்கு ஒரு அடையாளம், ஒரு மொழி இருக்க வேண்டும்” என்று சொல்லியிருப்பதைக் குறிப்பிட்டு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இந்தித் திணிப்பைப் பற்றி கேட்ட போது, “அது கேரளாவுக்கும், தென் இந்தியாவுக்கும் பொருந்ததாது” என்று அவர் உறுதியாகக் கூறி விட்டார்.

“தென் இந்திய மாநிலங்களில் இந்தியை திணிப்பதற்கு இதற்கு முன்பு பல முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது வெற்றியடையவில்லை. பாஜகவின் கொள்கை அது இல்லை” என்று தான் கருதுவதாக ஶ்ரீதரன் கூறியுள்ளார்.

இந்தியை எதிர்ப்பது ஏன்? – தோழர் தியாகு

ஆனால், “பாஜவுடன் கருத்தியல் ரீதியாக தனக்கு எந்த வேறுபாடும் இல்லை, உட்கட்சி பிரச்சினைகளை பொது வெளியில் கொண்டு வருவது பற்றி மட்டும்தான் கருத்து வேறுபாடு உள்ளது” என்று ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

மாட்டிறைச்சி சாப்பிடுவது பற்றி கேட்க ஆரம்பித்தவுடன், அது மிகச் சிறிய பிரச்சினை என்று கூறிய அவர் இந்தப் பிரச்சினை குறித்து பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறி விட்டார். பாஜகவினர் மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து சொன்ன கருத்துக்களைப் பற்றி, தான் பேச முடியாது என்றும் கூறியுள்ளார்.

“உணவு பழக்கம் என்பது ஒருவரது சொந்த விருப்பம், ஆனால், அது மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது” என்று கூறிய ஶ்ரீதரன், பாஜக மாட்டிறைச்சிக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வர விரும்புவது பற்றி  கேட்ட போது, பாஜக குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்த அனுமதிக்காது என்று பதில் கூறியுள்ளார்.

மாட்டிறைச்சி திருவிழாவை எதிர்க்கும் நீங்கள், மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்க்க மாட்டீர்கள்தானே என்று கேட்டதும், இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறீர்கள், பேட்டியை முடித்துக் கொள்ளலாம் என்று கோபப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது பசுவதை தடுப்புச் சட்டம்

லவ் ஜிகாத் பற்றி குறிப்பிட்டு “உத்தர பிரதேசத்தில் அது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கேரளாவிலும் அது போன்ற சட்டம் கொண்டு வராவிட்டால், கேரளா சிரியா போல ஆகி விடும் என்று கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளது” பற்றி கேட்ட போது, “அது பற்றி சொல்ல எதுவும் இல்லை” என்று எழுந்து விட்டார்.

கட்சியில் ஒருவரை இன்னொருவருக்கு எதிராக நிறுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறிய அவர் “லவ் ஜிகாத்” என்பது பற்றி தான் விளக்க முடியாது என்று கூறுகிறார்.

பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக இது தொடர்பாக உங்கள் கருத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று அது தொடர்பாக மேலும் வலியுறுத்திய போது, “வட இந்திய பத்திரிகையாளர்கள் மட்டும்தான் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள். ‘லவ் ஜிகாத்’, மாட்டிறைச்சி போன்ற கேள்விகளை கேட்டு ஏன் உணர்ச்சிகளை தூண்டி விடுகிறீர்கள். நீங்கள் எனது நேரத்தை வீணாக்குகிறீர்கள்” என்று ஊடகவியலாளர் நிதி சுரேஷ் மீது குற்றம் சாட்டினார்.

“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை

“கேரள மக்கள் இது தொடர்பாக கவலைப்படுகின்றனர். ஒரு வேளை பாஜக கேரளாவில் ஆட்சிக்கு வந்தால் இங்கும் உத்தர பிரதேசம் போன்று சட்டங்கள் வருமோ என்று அவர்கள் கவலைப்படுகின்றனர்” என்று வலியுறுத்தி கேட்ட போது,

“பாஜக அரசாங்கம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கும்” என்று கூறிய ஶ்ரீதரன் அது குறித்து விவாதிக்க மறுத்து விட்டார்.

“கேள்வி கேளுங்கள், ஆக்கபூர்வமான கேள்வி கேளுங்கள். வட இந்தியாவில் இந்தப் பிரச்சினைகள் முக்கியமானவையாக உள்ளன. அப்படி என்றால் வட இந்திய தலைவர்களிடம் கேளுங்கள். நான் அவற்றுக்கு பதில் சொல்ல முடியாது” என்று கூறி விட்டார்.

கேரளாவில் கட்டாய மத மாற்ற தடைச் சட்டம் இயற்றப்படும் – மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உறுதி

கேரளா பாஜக தலைவர் கே சுரேந்திரன் மீதான 200 வழக்குகளைப் பற்றி கேட்ட போது, அந்த வழக்குகள் அனைத்தும் பொய் வழக்குகள் என்று கூறியிருக்கிறார், ஶ்ரீதரன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்