உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் (சோனேலால்)-ன் சட்டமன்ற உறுப்பினர் அமர் சிங் சௌத்ரி விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தந்ததுடன், மத்திய அரசு ஏன் இதை நடைமுறைப்படுத்துவதில் இவ்வளவு உறுதியாக உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (மார்ச் 17), செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள அமர் சிங் சௌத்ரி, “மக்களும் விவசாயிகளும் கோபமடைவதால், மத்திய அரசிற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிகிறது. மாறாக, ஒரு சில தொழிலதிபர்களை கவலையடைய செய்யாமல் இருப்பதே அரசின் நோக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
“ஓர் ஆண்டுக்கு முன்பு, தொழிலதிபர்களான கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் வெவ்வேறு மாநிலங்களில் பெரிய உணவு தாணிய கிடங்குகளை ஏன் கட்டினார்கள்? விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்ற பாஜகவின் வாக்குறுதியை நம்பியே, 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், மீண்டும் 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் பாஜகவிற்கு மக்களும், விவசாயிகள் வாக்களித்தனர். ஆனால், இம்மூன்று விவசாய சட்டங்களால், அவர்கள் அதிருப்தியே அடைந்துள்ளனர்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.
பெரிய தொழிற்சாலைகள் தங்களின் உணவு கிடங்குகளை, ஹரியானாவில் உள்ள பானிபட்டில் இருந்து குஜராத் மாநிலம் வரை கட்டியதில் விவசாயிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிடும் அமர் சிங் சௌத்ரி, தங்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதில் அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகக் மாற்றப்படுவார்கள் என்று விவசாயிகள் அஞ்சுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத் திறக்க கோரும் விவசாயிகள் – ஏற்கமறுக்கும் மத்திய அரசு
ஆனால், விவசாயிகளின் இந்த ஐயங்களைத் தீர்க்க மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.