Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டம் – ஜக்கி வாசுதேவை பாஜக எப்படி பயன்படுத்தியது?

லைமை இல்லாத இயக்கங்களுக்கு தலைமையாகும் வகையில், சமூக வலைதளங்கள் இன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. முன்னர், பத்திரிக்கைகள் வழியாக பொதுமக்களுக்கு கருத்து தெரிவிக்கப்படும். இன்று, செய்திகளையும், தகவல்களையும் பெற, மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். இணையத்திற்கு வெளியே மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இது உதவுகிறது. 

சமூக வலைதளங்கள், அரசியல் விவாதங்கள் நடக்கும் முக்கியமான இடமாக உள்ளது. அதே சமயம், ஏதேச்சதிகார அரசுகள் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவும், அச்சத்தை விதைக்கவும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களை குறி வைத்து தாக்கவும் கூட சமூக வலைதளங்கள் பயன்படுகின்றன. கடந்த வருடம் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்த பிறகு, இந்தியாவில் நடந்தவை அனைத்தும், இதற்கான உதாரணம். 

2019, டிசம்பர் 11 அன்று, குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உடனேயே இந்தியா முழுவதும் எதிர்ப்பும், போராட்டங்களும் தொடங்கின. மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நகரங்களில் அமைதியான முறையில் போராடினர். நாட்கள் சென்றதும், மஹாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் , தங்கள் மாநிலங்களில் இச்சட்டம் அமல் செய்யப்படாது என்றனர். மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மமதா பானர்ஜி, ”நான் உயிரோடு இருக்கும் வரையில் மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் செய்யப்படாது. யாரும், நாட்டைவிட்டோ, மாநிலத்தைவிட்டோ போக வேண்டியதில்லை. வங்காளத்தில் தடுப்பு முகாம்கள் இருக்காது” என்றார். 

சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவு பெற பிரச்சாரங்கள்

தேசிய அளவில் நடந்த போராட்டங்கள், பல மாநிலங்களில் இருந்த எதிர்க்கட்சிகளின் எதிர்வினை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசை பின்வாங்க வைத்தது. இந்த அழுத்தத்தில் பல்வேறு பிரச்சாரங்களை, இணையத்திலும்,  இணையத்திற்கு வெளியேயும்  நடத்துவதாக அரசு முடிவெடுத்தது. சி.ஏ.ஏவுக்கு ஆதரவு கோர சமூக வலைதள பிரச்சாரம், மிஸ்டு கால் பிரச்சாரம், தேசிய அளவிலான ஜன் ஜக்ரன் அபியான் ஆகியவை தொடங்கப்பட்டன. 

பாலுணர்வை தூண்டும்படியான விளம்பரங்கள்,  ‘வேலைவாய்ப்புகள்’,  ‘இலவச செல்ஃபோன் டேட்டா’,  ‘நெட்ஃப்லிக்ஸ் அக்கவுண்டுகள்’ என கவர்ச்சிகர விளம்பரங்களை பயன்படுத்துவதற்கு முன், சத்குரு என்றழைக்கப்படும் ஜக்கி வாசுதேவின் வீடியோ ஒன்றை பரவலாக விளம்பரப்படுத்தத் தொடங்கியது பாஜக. 

சத்குரு ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, சி.ஏ.ஏ குறித்து ஒரு பெண் கேள்வி கேட்பதில் இருந்து வீடியோ தொடங்குகிறது. “நான் அந்த சட்டம் குறித்து முழுமையாக படிக்கவில்லை. செய்தித்தாள்களில் இருந்தும், பொதுவாக மக்கள் பேசிக் கொள்வதில் இருந்தும் தான் அதைப் பற்றி எனக்கு தெரியும்” என பதில் சொல்லத் தொடங்குபவர் 21 நிமிடங்கள் சி.ஏ.ஏ. குறித்து பேசுகிறார். 

சத்குருவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அவரால், தன் உரைகள் வழியே கோடிக்கணக்கான மக்களின் கருத்துக்களில் தாக்கத்தை உண்டாக்க முடியும். இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் எல்லாம் இந்த வீடியோவை பகிர்ந்தார். தானே “முழுதாக அச்சட்டத்தை குறித்து படிக்கவில்லை” என்றாலும், மாணவர்கள் சட்டத்தை முழுமையாக படித்துவிட்டு, அதன்பிறகு போராட வேண்டும் என அந்த வீடியோவில் சொல்கிறார். இறுதியாக, “பல்கலைகழகங்களில் இருக்கும் படிப்பறிவில்லாத இளைஞர்கள் கலவரம் செய்கிறார்கள்” என்று சொல்லி தன் உரையை முடிக்கிறார். 

2019, டிசம்பர் 30 அன்று, சத்குருவின் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த பிரதமர் மோடி “சி.ஏ.ஏ குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் அளிக்கும் இந்த தெளிவான உரையை கேளுங்கள். வரலாற்று ரீதியாக அதை விளக்கி, சகோதரத்துவம் மிக்க நம் கலாச்சாரத்தை குறித்துப் பேசுகிறார். சி.ஏ.ஏவை எதிர்க்கும் குழுவினர் பரப்பும் போலிச் செய்திகளை அம்பலப்படுத்துகிறார். #IndiaSupportsCAA” என பதிவிட்டுள்ளார். வீடியோவின் யூடியூப் லிங்கை பகிர்ந்து #IndiaSupportsCAA எனும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். 

அதே நாள், சத்குரு நடத்தும் இஷா ஃபவுண்டேஷன் அமைப்பு, ட்விட்டரில் ஒரு வாக்கெடுப்பை நடத்தியது. சத்குருவின் வீடியோவுக்கான லிங்க் உடன், சி.ஏ.ஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் நியாயமானதா என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பில் 11,439 பேர் பங்கேற்றுள்ளார்கள். வாக்கெடுப்பு தொடங்கிய அதே நாளில் 63% பேர் போராட்டங்கள் நியாயமானவையே என்று சொல்வதாக முடிவு வந்ததும், ஒரே நாளில் வாக்கெடுப்பு நிறைவு பெற்றது. 

இந்த இடத்தில் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி – மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும், கலவரங்களை உருவாக்கியிருக்கும் சி.ஏ.ஏ போன்றதொரு விஷயம் குறித்து, சத்குரு பகிரங்கமாக தவறாக பேச வேண்டும், சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை தாக்க வேண்டும், பல்கலைகழக மாணவர்களையும், ஆய்வு அறிஞர்களையும் “படிப்பறிவில்லாதவர்கள்” என சொல்ல வேண்டும் எனும் சூழல் உருவாவதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்? 

#IndiaSupportsCAA பிரச்சாரத்திற்கான நிதியுதவி 

சத்குருவின் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த அமித் ஷா, “சி.ஏ.ஏ குறித்த பொய்களை நம்பாதீர்கள். சத்குரு அளிக்கும் தெளிவான விளக்கத்தை பாருங்கள். எல்லோரும், குறிப்பாக இளைஞர்கள், இதைப் பார்த்து நமக்கு சி.ஏ.ஏ ஏன் வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களோடும் இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.#IndiaSupportsCAA” என பதிவிட்டுள்ளார். 

சத்குருவின் ஆங்கில யூட்யூப் சேனலில் இந்த வீடியோ டிசம்பர் 28, 2019 அன்று வெளியிடப்பட்டது. சத்குரு தன்னுடைய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் டிசம்பர் 29 காலை வீடியோவை பதிவு செய்தார். ஆனாலும், டிசம்பர் 30ல் இருந்து தான் பாஜக இந்த வீடியோவை விளம்பரப்படுத்த தொடங்கியது. ஃபேஸ்புக்கில் முதல் முறையாக பணம் செலுத்தி விளம்பரம் செய்யப்பட்ட போது ஒரு மில்லியன் பயனர்களுக்கு மேல் இந்த வீடியோவை பார்த்திருந்தனர். 

பாஜகவின் ஃபேஸ்புக் பக்கமும் இதே விடியோவை வைத்து மூன்று விளம்பரங்கள் கொடுத்திருந்தது. ஆனால் அந்த வீடியோ இந்திக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த விளம்பரங்கள் 2019  டிசம்பர் 30, தொடங்கி 2020 ஜனவரி 23, வரை செயல்பட்டன. சி.ஏ.ஏ ஆதரவு மிஸ்டு கால் பிரச்சாரத்திற்கு பாஜகவின் ஃபேஸ்புக் பக்கம் ஒரு விளம்பரத்தை தொடங்கியது, அது ஜனவரி 7 முதல் ஜனவரி 23 வரை செயல்பட்டது. 

2019 டிசம்பர் 30, தொடங்கி 2020 ஜனவரி 23, வரை பாஜகவின் ஃபேஸ்புக் பக்கம் 15 முதல் 17 லட்சம் ரூபாயை விளம்பரங்களுக்காக செலவிட்டுள்ளது. இந்த விளம்பரங்கள் 10 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளன. மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தான் அதிகளவு பார்க்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் விளம்பரம் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது எனும் தகவல்,  ஏன் முக்கியமானது என்றால், வங்காளத்திற்குள் ஊடுருவ பாஜக கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தன்னுடைய பலம் அத்தனையையும் பயன்படுத்தி, வருகின்ற சட்டமன்ற தேர்தலை வெல்ல வேண்டும் என செயல்படுகிறது. 

பாஜகவின் ஃபேஸ்புக் பக்கம் மட்டுமல்ல, குஜராத் எம்.எல்.ஏ ஜிது வக்லானி என்பவரும் 90,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு #IndiaSupportsCAA பிரச்சாரத்தை விளம்பரப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரான பீஹாரை சேர்ந்த ஆர்.கே சின்ஹாவும் இந்த பிரச்சாரத்தை விளம்பரப்படுத்த கணிசமான தொகையை செலவிட்டுள்ளார். 

பாஜக தலைவர்கள், மாநில பாஜக பிரிவுகள், பாஜக ஆதரவாளர்கள் நடத்தும் பிற ஃபேஸ்புக் பக்கங்கள், அரசுக்கு ஆதரவான ஊடக நிறுவனங்கள் உட்பட 99 ஃபேஸ்புக் பக்கங்கள் 2019, டிசம்பர் 16 முதல் 2020, மார்ச் 9 வரை 220 ஃபேஸ்புக் விளம்பரங்களை வெளியிட்டுள்ளன. 

#IndiaSupportsCAA விளம்பரத்தை பாஜக நடத்தத் தொடங்கியதும், இது குறித்து நிறைய பதிவுகளும், இடைவினைகளும் (Interactions) வரத் தொடங்கின. டிசம்பர் 11 , 2019 முதல் ஃபெப்ரவரி 9, 2020 வரை மொத்தம் 11,348 பதிவுகளும் 10,469,748 இடைவினைகளும் செய்யப்பட்டுள்ளன. 

அதிலும் குறிப்பாக, டிசம்பர் 30, 2019 முதல் ஜனவரி 23, 2020 வரை மொத்த பதிவுகள் மற்றும் இடைவினைகளின் எண்ணிக்கை முறையே 10,175 மற்றும் 8,778,476 ஆக இருந்துள்ளது. 

அதாவது, முப்பத்து ஆறு நாட்களில், #IndiaSupportsCAA பாஜகவால் தொடங்கப்படுவதற்கு 14 நாட்கள் முன்னரும், 17 நாட்கள் கழித்தும், மொத்த பதிவுகள் மற்றும் இடைவினைகள் முறையே 1,173 மற்றும் 1,691,272 அளவில் குறைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட செய்தியை இணையத்தில் பரப்ப பணம் பயன்படுத்தப்பட்டதையே இது காண்பிக்கிறது. 

#IndiaSupportsCAA தோல்வி 

பாஜக ஃபேஸ்புக் பக்கம் பணம் கொடுத்து பிரச்சாரத்தை நடத்திய போது, ஒரு நாளுக்கு சராசரியாக #IndiaSupportsCAA குறித்து 356 பதிவுகளும், 3,02,092 இடைவினைகளுமே வந்துள்ளன. 

ஜனவரி 23, 2020 அன்று விளம்பரங்களுக்கு பாஜக பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டாலுமே, தலைவர்களும், கட்சி ஊழியர்களும் மார்ச் 9, 2020 வரை #IndiaSupportsCAA விளம்பரங்களுக்கு பணம் செலுத்திக் கொண்டிருந்தனர்.  இச்சமயத்தில் #IndiaSupportsCAA குறித்து ஒரு நாளுக்கு சராசரியாக 26 பதிவுகளும் 25,994 இடைவினைகளுமே வந்தன. 

2020 மார்ச் இறுதியில் கோவிட்-19 பொது முடக்கம் தொடங்கியதற்கு முன்பு வரை, சி.ஏ.ஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், ஆதரவாகவும் விவாதங்களும், பேரணிகளும், கூட்டங்களும் நடந்து கொண்டு இருந்தன. ஆனால், #IndiaSupportsCAA பிரச்சாரத்திற்கு பிறகு , மக்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் சி.ஏ.ஏவுக்கு ஆதரவாக எழுதவில்லை. மார்ச் 10, 2020 முதல் டிசம்பர் 11, 2020 வரை மொத்தமாக 61 பதிவுகளும், 39,747 இடைவினைகளும் மட்டுமே #IndiaSupportsCAA குறித்து வந்தள்ளன. இதற்கு நேர் எதிராக, டிசம்பர் 31, 2019 அன்று, #IndiaSupportsCAA என்ற திட்டமிட்ட பிரச்சாரத்தை பாஜக தொடங்கியதற்கு மறுநாள், #IndiaDoesNotSupportCAA எனும் ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது. 

இதன் வழியே, #IndiaSupportsCAA பிரச்சாரத்தில் முன்னர் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து இயங்கவில்லை என்பதும், பிறகு அந்த பிரச்சாரத்தையே நிராகரித்தார்கள் என்பதும் தெரிகிறது. அலங்கார யுக்தியாக இருந்த சி.ஏ.ஏ ஆதரவு பிரச்சாரம் நிலைத்து நிற்கவில்லை, ஆனால், சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள் தன்னிச்சையானதாகவே இருந்தன. 

சமூக வலைதள அதிகாரச் சுரண்டல் 

இந்த #IndiaSupportsCAA எனும் ஆக்ரோஷமான பிரச்சாரம், சி.ஏ.ஏ குறித்த அரசின் நிலைப்பாட்டை நிரூபிக்கிறது. குடிமக்களில் பெரும்பாலானோர் சி.ஏ.ஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவளித்தனர். வலது சாரி அரசியல்வாதிகள் குடிமக்களின் கவலையை புரிந்து கொள்ளாமல், பணத்தை வைத்து மக்களின் கருத்தை வீழ்த்திவிட முடியும் என நினைத்தனர். 

போலியான செய்திகளை பரப்பவும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களை குறி வைக்கவும் தொடர்ந்து சமூக வலைதள விளம்பரங்களுக்கு பணம் செலுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த செயற்கை பிரச்சாரத்தில், வலது சாரிகளுக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. ஒருவேளை, அடுத்த முறை அவர்கள் வெற்றி பெறலாம். 

பண பலமும், சமூக வலைதளங்களில் தாக்கத்தை உண்டாக்குவதும் ஜனநாயக கொள்கைகளை நொறுக்குவதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும், சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கவும் முடியும். 

நேற்று இருந்ததை விட, இன்றைக்கு நமக்கிருக்கும் சவால் பெரியது. பிரிவினைவாதம் மற்றும் சகிப்பின்மை நிறைந்த, போலிக் கருத்துக்களை சமூக வலைதளங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி பரப்பி, அதனால் தேர்தல் முடிவுகளை கூட மாற்ற முடியும் எனும் புது யதார்த்தத்தை புரிந்து கொள்ள திணறும் அனைத்து ஜனநாயகமும் இந்த சவாலை சந்திக்கிறது. இந்த சவாலை நாம் அங்கீகரித்தாக வேண்டும். 

( www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்