Aran Sei

அரியலூர் மாணவி தற்கொலை; “மதமாற்றம் காரணமில்லை” – பாஜக சிறுபான்மை பிரிவுத் தலைவர் தகவல்

ஞ்சாவூர் இருதய மேல்நிலைப்பள்ளியின் மாணவியின் தற்கொலைக்குக் காரணம் ‘கட்டாய மதமாற்றம்’ என்ற பாஜகவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று பாஜகவின் தஞ்சாவூர் மாவட்ட சிறுபான்மை பிரிவுத் தலைவர் கூறியுள்ளதாக மிர்ரர் நவ் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

17 வயதான பள்ளி மாணவியின் தற்கொலை, தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் படித்த கிருஸ்தவ பள்ளியின் விடுதி காப்பாளர் மாணவியை கிருஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியது தான் இந்த தற்கொலைக்குக் காரணம் என்று பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் தனது மரண வாக்குமூலத்தில் கட்டாய மதமாற்றம் தான் தன் தற்கொலைக்குக் காரணம் என்று மாணவி கூறவில்லை என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தித் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (25.01.22) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாலை, “மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை, சிபிஐ போன்ற சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்தி, முழு உண்மையையும் வெளியே கொண்ட வர வேண்டும். கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று”  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த நிகழ்வு குறித்து புலன் விசாரணை நடத்திய மிரர் நவ் ஊடகத்தின் செய்தியாளரிடம் பேசியுள்ள பாஜகவின் தஞ்சாவூர் மாவட்ட சிறுபான்மை பிரிவுத் தலைவர், அரியலூர் மாணவிக்குத் தனது குடும்பத்துடன் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்ததாகவும், அவரது அப்பாவின் இரண்டாவது மனைவியின் மூலம் அவர் பல தொல்லைகளை அனுபவித்து வந்ததுதான் அவளது மரணத்திற்குக் காரணம் என்றும் கூறியுள்ளார்.

தூய இருதய பள்ளியின் மாணவர்களிடம் பாஜகவின் தஞ்சாவூர் சிறுபான்மை பிரிவுத் தலைவர் விசாரித்ததில் அந்த பள்ளியில் கட்டாய மதமாற்றம் என்ற பிரச்சனை எதுவும் இல்லை என்று மாணவர்கள் தெரிவித்ததாக மிர்ரர் நவ் கூறியுள்ளது.

தஞ்சாவூரின் உள்ளூர் கட்சி கமிட்டியிடம் கூட இது சம்பந்தமாக விசாரிக்காமல் கட்டாய மதமாற்றம் என்று பிரச்சாரத்தை பாஜக தலைமை கையில் எடுத்துள்ளதாக அவர் ​மிர்ரர் நவ் தொலைகாட்சியிடம் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்