ஜீ தமிழில் வெளியான சிறார்களின் நிகழ்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமுஎசக வின் மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் நலனுக்கும் மக்களது இயல்பான வாழ்வுரிமைக்கும் எதிரான திட்டங்களை மும்முரமாக செயல்படுத்திவரும் ஒரு முட்டாள் மன்னனை விமர்சித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறார் நிகழ்ச்சியொன்று 2022 ஜனவரி 15 அன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் உள்ளடக்கம் இந்திய பிரதமரை அவமதிப்பதாக உள்நோக்கம் கற்பித்து பாஜக செய்துவரும் அழும்புகள் கருத்துரிமைக்கு எதிரானவை.
குறிப்பிட்ட இந்நிகழ்வில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை கோரி காவல்துறையிடமும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமும் பாஜக மாநிலத்தலைமை புகாரளித்திருக்கிறது. தகவல் ஒளிபரப்புத்துத்துறை இணையமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆறே மாதங்களில் தமிழ்நாட்டு ஊடகங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் போவதாகவும், தங்களை விமர்சிப்பவர்களை, தாங்கள் ஆட்சியிலிருக்கும் 17 மாநிலங்களின் காவல்துறையை வைத்து ஒடுக்குவோம் என்றும் பாஜக நிர்வாகிகள் தமிழக மக்களை மிரட்டிவந்ததன் தொடர்ச்சிதான் இப்போதைய புகார்.
குழந்தைகளாலும்கூட விமர்சிக்கப்படுமளவுக்கு பிரதமரின் செயல்பாடுகள் இருக்கின்ற பட்சத்தில் அவர்தான் தனது கொள்கைகளையும் நடைமுறைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டுமேயல்லாது விமர்சிப்பவர்கள் வாய்மூடிக்கிடக்க வேண்டியதில்லை. ஆனால் பாஜக இந்தச் சிறார் நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை கோரி ஜனநாயகத்திற்கு விரோதமான தனது உண்மைமுகத்தை மீண்டும் வெளிக்காட்டியுள்ளது.
மாற்றுக்கருத்துடையோர் மீது அவதூறு பரப்பும் சமூகவிரோதிகளுக்கு கருத்துரிமை கோரும் பாஜகவினர், குழந்தைகளின் ஆக்கத்திறனையும் அரசியல் விழிப்பு மனநிலையையும் விமர்சனத்தை அச்சமின்றி வெளிப்படுத்தும் துணிச்சலையும் கண்டு ஆத்திரமடைந்துள்ளனர். ஒன்றிய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குழந்தைகள் மற்றும் ஊடகங்களின் சுதந்திரச் செயல்பாட்டை தடுத்திடும் அவர்களது முயற்சிக்கு தமுஎகச கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
இதேபோல, சாதி மத இன பாலின துவேஷங்களையும் வெறுப்பரசியலையும் எதிர்க்கிற, மக்கள் ஒற்றுமையையும் மதச்சார்பின்மையையும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் உயர்த்திப் பிடிக்கிற அமைப்புகளையும் ஆளுமைகளையும் முடக்கிப்போடும் இழிமுயற்சி இங்கே தொடர்கிறது. இவ்வாறான அமைப்புகளும் ஆளுமைகளும் தங்களது நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் புண்படுத்திவிட்டதாக சிணுங்கிக்கொண்டு காவல்துறையில் பொய்ப்புகார் அளிப்பதற்காகவே பல குழுக்கள் “இந்து” என்கிற முன்னொட்டுப்பெயருடன் இங்கே மந்தரித்துவிடப்பட்டுள்ளன.
ஒன்றிய ஆட்சியாளர்களுடன் நெருக்கமிருப்பதாக காட்டிக்கொண்டு உள்ளூர் அரசதிகாரத்தை எளியவர்கள் மீது ஏவத்துடிக்கும் இக்குழுக்களில் சில இப்போது யு2புரூட்டஸ் யுடியூபர்ஸ் மீது காவல்துறையில் புகாரளித்திருக்கின்றன. யு2புரூட்டஸ் முன்வைக்கும் கருத்துகளையும் கேள்விகளையும் எதிர்கொள்ள முடியாத ஆத்திரத்தில் அவர்களை முடக்கி வாய்ப்பூட்டு போட கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பொய்ப்புகார் மேல்நடவடிக்கை எதுவும் எடுப்பதற்கான முகாந்திரமற்றது. தமிழ்நாட்டின் பொது அமைதிக்கும் சுதந்திரமான ஊடகச்செயல்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இவ்வாறு பொய்ப்புகார் கொடுத்து அச்சுறுத்துவதையே தொழிலாகச் செய்துவரும் இத்தகைய குழுக்கள்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது என்று முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.