Aran Sei

பீகாரில் தேர்தல் வெற்றி ஊர்வலம் – மசூதியைச் சூறையாடிய பாஜக ஆதரவாளர்கள்

Image Credits: TRT World

பீகாரின் ஜாமுவா கிராமத்தில், நவம்பர் 11-ம் தேதி, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆதரவாளர்கள் வெற்றி ஊர்வலத்தை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவர்கள் ஒரு மசூதியைச் சூறையாடியதால், உள்ளே பிராத்தனை செய்து கொண்டிருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர் என்று ‘தி வயர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்று பேருக்குத் தலையிலும் முதுகிலும் காயம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது. பல வாகனங்களும்  சூறையாடப்பட்டுள்ளன. அப்போது, மசூதியின் ஒலிபெருக்கியும் அதன் இரண்டு கதவுகளும் உடைக்கப்பட்டுள்ளன.

ஜாமுவாவில் சுமார் 20-25 இஸ்லாமிய குடும்பங்களும் 500 இந்து குடும்பங்களும் உள்ளன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைவர் பவன் குமார் ஜெய்ஸ்வால் வெற்றி பெற்ற டாக்கா விதான் சபா தொகுதியில் ஜாமுவாவும் அடங்கும். தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழுகையின் போது மசூதி மீது கற்கள் வீசப்பட்டதாக மசூதியின் பராமரிப்பாளர் மஹர் ஆலம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் பவன் ஜெய்ஸ்வாலின் வெற்றியைக் கொண்டாடும் இந்த ஊர்வலத்தில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் மசூதிக்கு அருகில் வந்தவுடன் கற்களை வீசத் தொடங்கினர். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழங்கிக்கொண்டே அவர்கள் அதன் கதவுகளையும், மைக்கையும் உடைத்தார்கள்” என்று மஹர் ஆலம் ‘தி வயரிடம்’ தெரிவித்துள்ளார். “இந்த மசூதி இப்பகுதியில் பழமையான ஒன்று” என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த மஹர் ஆலம் “அவர்கள் எங்களை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னார்கள். இந்த நாடு உங்களுடையது அல்ல என்று அவர்கள் கூறினார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Image Credits: The Wire
Image Credits: The Wire

“இஸ்லாமிய குடும்பங்கள் இப்போது அச்சமடைந்துள்ளார்கள். ஆனால், நிர்வாகம் எங்களுடன் இருப்பதாகவும், யாரும் எங்களை காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளது.

இந்தச் சம்பவம், புதன்கிழமை மாலை நடந்ததாக டாக்கா பிஎஸ்ஸின் காவல்நிலைய அதிகாரி அபய் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். “இது நடந்தபோது அப்பகுதியில் பாஜக ஆதரவாளர்களால் வெற்றி ஊர்வலத்தை நடத்தினர். அவர்கள் மசூதியை அடைந்ததும் மைக்கைக் கொண்டு முழக்கமிட்டனர். மசூதிக்கு வெளியே ஒரு கடைக்காரர், தொழுகை உள்ளே நடந்து கொண்டிருந்ததால் மைக்கை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். அவர்கள் அதை கேட்கவில்லை, எனவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பேரணியில் ஈடுபட்டவர்கள் மசூதியின் மீது கற்களை வீசத் தொடங்கினர்” என்று அவர் கூறியுள்ளார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி), 145 (கலைப்பதற்கான உத்தரவு உள்ளதை அறிந்தும் சட்டவிரோத கூட்டத்தில் கலந்துகொள்வது அல்லது தொடர்வது), 148 (கொடிய ஆயுதத்துடன் கலவரத்தில் ஈடுபடுவது), 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுவது), 295 (எந்தவொரு வர்க்கத்தின் மதத்தையும் அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலத்தைச் சூறையாடுவது அல்லது சேதம் விளைவிப்பது) மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தப் பேரணியில் ஈடுபட்டவர்கள்மீது வழக்கு பதிவாகியுள்ளது”. என்று தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

яндекс

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்