மூத்த தகவல் ஆணையர் வனஜா என்.சர்ணாவைத் தலைமைத் தகவல் ஆணையர் பதவியில் நியமிப்பதற்குப் பதிலாக முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி யஷ்வர்தன் குமார் சின்ஹாவை நியமித்துள்ள மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டவராக அறியப்படும் பத்திரிகையாளர் உதய் மஹூர்கரை தகவல் ஆணையராக நியமித்ததையும் அவர் விமர்சித்துள்ளார்.
`தேர்வில் முறைகேடு’
அக்டோபர் 24-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேர்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சியின் பிரதிநிதியாக ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் கலந்துகொண்டார். அப்போது, தேர்விற்கான அளவுகோல்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் எனும் உச்ச நீதிமன்ற உத்தரவை இக்குழு மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தேர்வுச் செயல்முறையை “தகவல் அறியும் உரிமைச் சட்டம் வகுத்துள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத்தன்மை குறிக்கோள்களைத் தோற்கடிக்கும் ஒரு வெற்றுச் சம்பிரதாயத்தைத் தவிர வேறொன்றுமில்லை” என்று அவர் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு, யஷ்வர்தன் சின்ஹாவைத் தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு நியமிக்க முயன்றபோது, யஷ்வர்தனை விட வனஜா என்.சர்ணா மூத்தவர் என்ற அடிப்படையில் ஆதிர் ரஞ்சன் அதனை எதிர்த்துள்ளார். ஆணைக்குழுவின் தலைவருக்கு உள்நாட்டு ‘களநிலவரத்தில்’ அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சின்ஹாவுக்கு “உள்நாட்டு அனுபவம் இல்லை, ஆனால், வஞ்சனா சர்னா கமிஷனின் மூத்த தகவல் ஆணையர்” என்று அவர் வாதிட்டுள்ளார்.
கூட்டத்துக்கு முன், தேர்வுக் குழு இரு வேட்பாளர்களின் பெயரை மட்டுமே வழங்கியுள்ளது. அதில், யஷ்வர்தன் குமார் சின்ஹா மற்றும் தகவல் ஆணையர் நீரஜ் குமார் குப்தா ஆகியோர் அடங்குவர்.
`தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் வெளிப்படையான பாஜக ஆதரவாளர்’
தகவல் ஆணையர் பதவிக்குத் தேர்வுக் குழு 7 நபர்களைப் பரிந்துரைத்துள்ளது. இதையும் சௌத்ரி விமர்சித்துள்ளார். “இந்த வேட்பாளர்கள் மற்றவர்களை விடப் பொருத்தமானவர்கள் என்பதைத் தேர்வுக் குழு நிரூபிக்காதது அதிர்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
பரிந்துரைக்கப்பட்ட 355 வேட்பாளர்களில் மஹூர்கரின் பெயர் இடம்பெறவே இல்லை என்றும் இருப்பினும் திடீரென அவரை தகவல் ஆணையர் பதவியில் நியமிப்பதாகவும் கூறி ஆதிர் எதிர்த்துள்ளார். `இந்தியா டுடேயின்’ மூத்த துணை ஆசிரியரான மஹூர்கர் `ஆளும் அரசியல் கட்சி மற்றும் அதன் சித்தாந்தத்தின் வெளிப்படையான ஆதரவாளர்’ என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
2017-ம் ஆண்டில் மஹூர்கர் `மார்ச்சிங் வித் எ பில்லியன்’ (Marching with a Billion) எனும் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இந்நூல் ஆட்சியின் நடுப்பகுதியில் மோடி அரசாங்கத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்தல் பற்றியது.
இந்த இரண்டு நபர்களைத் தவிர, மோடி தலைமையிலான தேர்வுக் குழு, துணைத் தணிக்கையாளரான ஜெனரல் சரோஜ் புன்ஹானியைத் தகவல் ஆணையராகத் தேர்வு செய்துள்ளது.
பாதுகாப்புப் தளவாடங்கள் உற்பத்தித் துறையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் சந்திரா, துணைத் தலைமைத் தணிக்கையாளர் மீனாட்சி குப்தா, அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குநர் ஈரா ஜோஷி, சிறு குறு தொழில் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அருண்குமார் பாண்டா மற்றும் முன்னாள் தொழில் துறைச் செயலாளர் ஹீரா லால் சமாரியா ஆகியோரும் இந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.
‘உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் அவசர விசாரணையைக் கோரிய சில நாட்களில் தேர்வுக் குழு கூடியது’
மத்திய தகவல் ஆணையத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான பிரச்சினையை அவசரமாகப் பரிசீலிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து, உடனடியாகத் தேர்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த விவகாரத்தில், 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தகவல் ஆணையர்களை நியமிப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து குறிப்பிடப்பட்டது. 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 26 மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்றது மற்றும் 2020ஆம் ஆண்டின் இறுதியில் மற்றொரு ஆணையர் அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டதின் காரணமாகத் தற்போது தலைவரின் பதவி உட்பட 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆகையால் 36,600 க்கும் மேற்பட்ட மேல்முறையீடுகளும் புகார்களும் நிலுவையில் உள்ளன.
பிரதமர் அலுவலகத்தின் கீழ், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் விளம்பரம் வெளியான உடன் 139 பேர் தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கும் 355 பேர் தகவல் ஆணையர்கள் பதவிக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.