பாஜக தன் வேட்பாளர்களின் தேர்தல் பணிக்கு அளித்த 13 கோடிக்கு வெற்றிப்பெற்றவர்களும் தோற்றவர்களும் கணக்கு கொடுக்க வேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (மே 24), சமூக வலைதளமான டிவிட்டர் ஸ்பேசில் பாஜக ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலில் எஸ்.வி.சேகர் பங்கேற்றுள்ளார். அப்போது, அவர் அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் பாஜக அடைந்த தோல்வி குறித்து பேசியுள்ளார். எஸ்.வி.சேகரின் குரலை மட்டும் கொண்ட அக்காணொளியானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், “வேல் வேல் வெற்றி வேல்னு சொல்றனால எப்படி ஜெயிக்க முடியும்? ஒருதர் வேல் வேல் வெற்றி வேல்னு சொன்னா, இன்னொருதன் ஓம் நமசிவாயானு சொல்லுவான். ஒருதர் ஓம் நமோ நாராயணன்னு சொல்லுவாங்க. பார்த்தசாரதி கோயிலுக்கு வருபவர்கள், கபாலி கோயிலுக்கு வரமாட்டார்கள். எத்தனையோ கோயில், எத்தனையோ சாமி இருக்கு. நாம வேல் வேல் வெற்றி வேலுக்கு பதிலா, இறை நம்பிக்கையுள்ளோர்னு சொல்லிருக்கணும்.” என்று தெரிவித்துள்ளார்.
“பாஜக வேட்பாளர்கள் யாரும் மோடியின் புகைப்படத்தைத் தங்கள் பரப்புரை வாகனங்களில் வைத்துக்கொள்ளவில்லை. நானாக இருந்திருந்தால், அந்த வாகனத்திலிருந்து கிழே இறங்கியிருப்பேன். மோடியின் படம் இல்லாமல் கிடைக்கும் வெற்றி எனக்கு வேண்டாம். நான் கேள்விப்பட்டவரை, பாஜக தன் வேட்பாளர்களுக்கு 13 கோடிவரை தொகுதி தேர்தல் பணிக்குக் கொடுத்திருக்கிறது. வெற்றிப்பெற்றவர்களும் தோற்றவர்களும் அதற்குக் கணக்கு கொடுத்தார்களா? கொடுக்க வேண்டும்.” என்று எஸ்.வி.சேகர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டபேரவை தேர்தலை விதிமுறைகளின் படி, ஒரு சட்டபேரவை தொகுதிக்கு வேட்பாளர் ரூ.30.8 லட்சம் வரைதான் செலவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிந்த பிறகு வேட்பாளர்கள் செலவுக்கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், “கமலாலயத்திற்குள்ளேயே கட்சியை நடத்த வேண்டுமானால், அது ஃபைனான்ஸ் கம்பெனியாகதான் இருக்க வேண்டும். கடன் வேண்டுவோர்தான் அங்கு வருவார்கள். மற்றபடி நாம்தான் மக்களிடம் செல்ல வேண்டும். இன்றைக்கு வரைக்கும் பாஜக என்ற கட்சி, தமிழ்நாட்டு மக்களிடையே சென்று சேரவே இல்லை. அதுதான் பிரச்சனை. அதை சரி செய்யும் வரை, மோடி மற்ற ஊர்களில் வெற்றிப்பெற்றால், நாம் இங்கு லட்டு கொடுத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கலாம். அதை மட்டும் செய்துக்கொண்டிருக்கலாம்.” என்று பாஜக செய்தித் தொடர்பாளரும் நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.