Aran Sei

விளையாட்டு மைதானத்திற்கு திப்பு சுல்தானின் பெயர் வைத்ததாக கூறி பாஜக போராட்டம் : போராட்டக்காரர்களை கைது செய்த காவல்துறை

மும்பை மல்வானியில் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு வளாகம் ஒன்றிற்கு விடுதலை போராட்ட வீரர் திப்பு சுல்தானின் பெயரை வைத்ததாகக் கூறி பாஜக மற்றும் பஜ்ரங் தள் ஆட்கள் நேற்று (ஜனவரி 26) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திப்பு சுல்தானின் பெயரைப் பூங்காவிற்கு வைக்கப் பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சிவசேனா தலைவரான ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.

மல்வானி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அஸ்லாம் ஷேக், தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் இந்த விளையாட்டு மைதானத்தைப் புனரமைத்த நிலையில் அதன் பணிகள் முடிவடைந்ததால் நேற்று (ஜனவரி 26) அதனைத் திறந்து வைத்தார்.

“பெரும்பாலான இந்துக்களின் மரணத்திற்குக் காரணமான ஒருவரின் பெயரை மைதானத்திற்குச் சூட்ட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.இதனை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் பஜ்ரங் தளம் தொண்டர்களை காவல்துறை தடியடி நடத்திக் கலைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று மகாராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமான பாஜக, விஎச்பி மற்றும் பஜ்ரங் தள் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், இரண்டு பேருந்துகளின் டயர்களையும் பஞ்சர் செய்துள்ளனர்.

சட்டவிரோத கூட்டம், கலவரம், தவறான கட்டுப்பாடு மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறுதல் தொடர்பான விதிகளின் கீழ் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் ஷெட்டி மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான மங்கள் பிரபாத் லோதா மற்றும் அதுல் பட்கல்கர் உட்பட மொத்தம் 64 பேர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது.

மும்பையின் மலாட் மேற்கில் உள்ள மல்வானியில் அமைந்துள்ள இந்த விளையாட்டு மைதானம் திப்பு சுல்தான் மைதானம் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. நாங்கள் இந்த மைதானத்திற்கு திப்பு சுல்தான் பெயரைச் சூட்டுவதற்கான எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பாஜக இந்த பிரச்சனைக்கு வகுப்புவாத பிரச்சனையாக மாற்ற முயல்கிறது என்று மல்வானி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்