Aran Sei

அமெரிக்காவில் நடந்ததுபோல் இந்தியாவிலும் நடக்கலாம் – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கணிப்பு

மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது, ஜனநாயக விரோதமானது என்று, கர்நாடகாவை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனவர் 6 ஆம் தேதியன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கூடிய தனது ஆதரவாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், தனது மாபெரும் வெற்றி திருடப்பட்டு விட்டதாகவும் பேசினார். அதன் அடிப்படையில், குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு பக்கபலமாக நிற்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தைச் சுற்றியிருந்த பாதுகாப்பை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

இந்நிலையில் டிரம்பின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக அறிவித்துள்ள டிவிட்டர் நிறுவனம் “தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் உலகத் தலைவர்களிடம், பொதுமக்கள் நேரடியாக கேள்வி கேட்க, எங்கள் தளம் பொது நல கட்டமைப்பாக உள்ளது. இது ஒரு கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கணக்குகள் எங்கள் விதிகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. வன்முறையைத் தூண்டுவதற்கு டிவிட்டரைப் பயன்படுத்த முடியாது. எங்கள் கொள்கைகள் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து வெளிப்படையாக இருப்போம்.” என்று தெரிவித்துள்ளது.

 

‘வன்முறையைத் தூண்டுவதற்கு ட்விட்டரைப் பயன்படுத்த முடியாது’ – அதிபர் ட்ரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கிய ட்விட்டர்

இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி சூர்யா, “முறைப்படுத்தப்படாத தொழில்நுட்ப நிறுவனங்களால், நம்முடைய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து புரியாதவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை. அவர்கள் அமெரிக்க அதிபரின் கணக்கையே முடக்கும்போது, யாருடைய கணக்கையும் முடக்கலாம். எவ்வளவு சீக்கிரம் இந்தியா, விதிமுறைகளை மறுபரிசீலினை செய்கிறதோ, நம்முடைய ஜனநாயகத்திற்கு அவ்வளவு நல்லது” என்று பதிவிட்டுள்ளார்.

சர்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதிற்கு பெயர் பெற்ற தேஜஸ்வி சூர்யா, சமீபத்தில் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது, “ஒவைசி, ஜின்னாவின் மறு அவதாரம்” என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஹைதராபாத் காவல்துறை அவருக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதேபோல், சர்சைகளுக்கு பெயர்போன, பாஜகவின் சமூகவலைதளப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா, கடந்த நவம்பர் 28ஆம் தேதி, விவசாயிகள் போராட்டம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ உண்மைக்கு புறம்பானது என்று கூறி, டிவிட்டர் நிறுவனம் அந்த பதிவில் எச்சரிக்கை வாசகத்தை சேர்த்தது.

இந்நிலையில், அமித் மால்வியாவும் தற்போது, டிரம்ப்பின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

அவருடைய டிவிட்டர் பக்கத்தில் “தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்பின் கணக்கை முடக்குவது, ஆபத்தான முன்னுதாரணமாகும்” என்றும் “பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தும் குழுக்களாக மாறியுள்ளன” என்றும் பதிவிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்