Aran Sei

ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிரான சீக்கிய அமைப்பின் தீர்மானம் – கண்டனம் தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்

கிறிஸ்தவத்துக்கு மதம் மாறும் சீக்கியர்களை தடுக்க சீக்கிய கோயில்களை நிர்வகிக்கும் ஷிரோமணி குருத்வாரா கூட்டு செயற்குழு (எஸ்ஜிபிசி) தவறிவிட்டது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மார்ச் 30, சீக்கியர்களின் அதிகாரப்பூர்வ அமைப்பான எஸ்ஜிபிசி சீக்கியர்களின் நலன்கள் தொடர்பான பல தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது.

அதில், ஆர்எஸ்எஸ்க்கு எதிரான தீர்மானத்தில், “இந்நாட்டை இந்து ராஜ்ஜியமாக மாற்ற ஆர்எஸ்எஸ் செய்து வரும் செயல்களால், பிற மதங்களின் மத சுதந்திரம் நசுக்கப்பட்டுள்ளது.  நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

“ஆர்எஸ்எஸின் இந்து ராஜ்ஜிய திட்டத்தை செயல்படுத்தாதீர்கள்” – மத்தியஅரசை வலியுறுத்திய சீக்கிய குருத்துவார் குழு

மேலும், “ஆர்எஸ்எஸ்ஸின் முன்னெடுப்புகளை செயல்படுத்துவதிலேயே கவனம் செலுத்தாமல், அனைத்து மதங்களின் உரிமைகளையும் அவற்றின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். சிறுபான்மையினரை அடக்குமுறை செய்யும் அனைத்து குழுகளை தண்டியுங்கள்.” என்று மத்திய அரசை அக்குழு வலியுறுத்தியிருந்தது.

நேற்று (ஏப்ரல் 1) இத்தீர்மானத்திற்கு பதிலளிக்கும் விதத்தில்  பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங், “பஞ்சாபில் சீக்கியர்கள் கிறிஸ்தவத்திற்கு மாறுவதைத் தடுக்க ஷிரோமணி குருத்வாரா கூட்டு செயற்குழு (எஸ்ஜிபிசி) தவறிவிட்டது. தங்களின் தோல்வியை மூடிமறைக்கவே, அவர்கள் இந்து ராஜ்ஜியத்தின் மீது தவறான சாயத்தைப் பூச முயல்கிறார்கள். எஸ்ஜிபிசி தலைவருக்கு ஒரு சவாலை விடுகிறேன். மதம் மாற வேண்டும் என்று இந்துக்களின் நிர்பந்தத்துக்கு உள்ளான ஒரு சீக்கியரையாவது காட்டுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

‘வெறுப்பின் உருவம்’ – ஆர்எஸ்எஸ் மீதான தடையும், சர்தார் வல்லபாய் பட்டேலும்

மிஷனரிகளால் சீக்கியர்கள் மதமாற்றப்பட்ட போது, எத்தனை முறை அதைக் கண்டித்து கண்டன அறிக்கையோ அல்லது நடவடிக்கையோ எஸ்ஜிபிசி எடுத்துள்ளது என்றும் மதமாறிய சீக்கியர்கள் எத்தனை பேர் மீண்டும் சீக்கிய மதத்திற்கு கொண்டு வரப்பட்டனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஆர்எஸ்எஸ்தான் ‘கர் வாப்சி’ (வீடு திரும்புதல்) பரப்புரை மேற்கொண்டு, மதம் மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வந்தது என்று ஆர்.பி.சிங் குறிப்பிட்டுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்