பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணி, கல்யாண ராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, கோபிசெட்டி பாளையம் துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்யாணராமனிடம், இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கல்யாணராமன், கோவை மத்திய சிறைக்கு மாற்றப்படவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபிகளை இழிவுப்படுத்தி பாஜக கல்யாண ராமன் பேச்சு: இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து கைது
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், கோவை மாவட்டம் ரத்னபுரியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில், இரு பிரிவினருக்கிடையே, மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, கல்யாணராமன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு தொடர்பாக, ரத்னபுரி காவல்துறையினர், அப்போதே வழக்கு பதிவு செய்ததாகவும், ஆனால் ஓராண்டாக கல்யாணராமனை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி, மேட்டுபாளையத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், முகம்மது நபிகள் குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும் கல்யாணராமன் தரக்குறைவாக பேசினார்.
’சிறுபான்மையினர் மீது வன்மம்; பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையடைக்க வேண்டும்’ -வைகோ
இதைத்தொடர்ந்து, கல்யாணராமனை கைது செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள், கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தினர்.
இந்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி, கோவை புறநகர் காவல்துறையினரால் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி, கல்யாணராமன் தாக்கல் செய்த மனுவை, மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமையன்று தள்ளுபடி செய்தது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.