Aran Sei

“அரசியலமைப்பு சட்டத்தை இழிவுபடுத்திய பாஜகவுக்கு அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க உரிமை இல்லை” – ராகேஷ் திகாயத்

Image credit : indianexpress.com

நாளை ஏப்ரல் 14-ம் தேதி அன்று அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி, ஹரியானாவின் பானிபட்டில் உள்ள பதவுலியில், அம்பேத்கர் உருவச் சிலையை திறந்து வைப்பதற்காக வரவிருக்கும், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை கிராமத்துக்குள் நுழைய விட மாட்டோம் என்று விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

“அரசியலமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க எந்த உரிமையும் இல்லை” என்று பாரதிய கிசான் யூனியனின் பெரிய பிரிவு ஒன்றின் தலைவரான ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா, முதல்வர் கட்டார் உட்பட ஹரியானா பாஜக தலைவர்களை சமூக புறக்கணிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, அகில இந்திய அம்பேத்கர் மகாசபை, “அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாடுவதைத் தடுக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“விவசாயிகள் போராட்டத்தின் பேரால், அம்பேத்கர் ஜெயந்தி நிகழ்வுகளை தடுப்பதற்கு சில விஷம சக்திகள் திட்டமிட்டுள்ளது எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. அத்தகைய விஷமிகளை கண்டிக்க வேண்டும் என்றும், நாடு முழுவதும் நடக்கும் அம்பேத்கர் ஜெயந்தி நிகழ்வுகளில் அவர்கள் இணைய வேண்டும் என்றும் விவசாயத் தலைவர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.” என்று அகில இந்திய அம்பேத்கர் மகாசபை தலைவர் அசோக் பார்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கும் தலித்துகளுக்கும் இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள சம்யுக்த கிசான் மோர்ச்சா, தாங்கள் “பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கரின் சிலை திறப்பை எதிர்க்கவில்லை. முதலமைச்சரை தவிர வேறு யார் சிலையை திறந்து வைத்தாலும் விவசாயிகளுக்கு எந்த மறுப்பும் இல்லை” என்று கூறியுள்ளது.

“விவசாயிகள் அம்பேத்கரியவாதிகள். தலித்துகளை பாதிக்கும் கிராமப்புற பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, டீசல் பெட்ரோல் ஆகியவற்றின் உயர்விலை ஆகியவற்றை எதிர்த்து போராடுவதற்கு அவர்கள் எங்களுடன் கரம் கோர்த்துள்ளனர்.” என்று ஹரியானாவைச் சேர்ந்த தலித் செயல்பாட்டாளரும் அரசியல்வாதியுமான காந்தா அல்லாரியா கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“அம்பேத்கருடன் எந்த ஒரு தொடர்பும் இருப்பதாகக் கூற பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் என்ன உரிமை உள்ளது? தலித்-விவசாயிகள் ஒற்றுமையை உடைக்க முயற்சிக்கும் அனைவரையும் நாங்கள் எதிர்ப்போம்” என்று காந்தா அல்லாரியா  கூறியுள்ளார்.

விவசாயச் சட்டங்கள், “குத்தகை விவசாயிகளுக்கு இன்னும் அதிக ஆபத்தானவை. ஏனென்றால், கார்ப்பரேட்டுகளின் பெருவீத விவசாயத்தை இலாபகரமாக்குவதற்காக பெரிய அளவில் எந்திரங்கள் பயன்படுத்தப்படும். அது குத்தகை விவசாயிகளின் இடத்தை முழுவதுமாக பறித்து விடும்.” என்று சுட்டிக் காட்டியுள்ள சம்யுக்த கிசான் மோர்ச்சா, குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தலித் அல்லது பகுஜன் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

“நிலமற்ற விவசாயிகளும் அவர்களது அமைப்புகளும் கூட விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய போராடுகின்றன என்பது நம் நாட்டு மக்களுக்கு மிகவும் உற்சாகமளிக்கும் ஒன்றாக இருக்கிறது” என்றும் அது கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்