Aran Sei

‘மக்கள் பணத்தை ஏமாற்றிவிட்டு நாட்டை விட்டு தப்பியோடியவர்களுடன் வியாபாரம் செய்யும் பாஜக அரசு‘ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

க்கள் பணத்தை ஏமாற்றிவிட்டு தண்டனையில் இருந்து தப்புவதற்காக நாட்டைவிட்டு தப்பியோடியவர்களிடம் இருந்து சரக்கு மற்றும் சேவைகளை பாஜக அரசு வாங்கி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தைச் சுட்டிக்காட்டி பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப், “மக்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடுவதற்கு முதலில் உதவும் பாஜக அரசு, பின்னர் அவர்களிடம் பொருட்களை வாங்குகிறது” என தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டிற்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

”வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய, ‘பொருளாதார குற்றவாளிகள்’ வெளிநாடுகளில் ஒய்வெடுக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து கொண்டு அரசுக்குப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறார்கள்.” என வல்லப் குற்றம்சாட்டியுள்ளார்.

ரூ 15 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்ததாக பரோடாவைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர்கள் நிதின் சந்தேசரா மற்றும் சேட்டன் சந்தேசரா மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு, அவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடினர்.

”செப்டம்பர் 2020ல் அமலாக்கதுறை கேட்டுக் கொண்டதன் பெயரில், நிதின் மற்றும் சேட்டன் சந்தேசராவை ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள்’ என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்தபிறகும், அவர்களின் சந்தேசரா குழுமத்திடம் இருந்து ரூ. 5,701.83 கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய்யை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாங்கியுள்ளது” என கௌரவ் வல்லப் தெரிவித்துள்ளார்.

”இந்தியாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட ஆறு வெளிநாட்டு கணக்குகளை சந்தேசரா சகோதரர்கள் தொடங்கியிருப்பதாக் பண்டோரா பேப்பர்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகள் அனைத்து நவம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 வரையிலான காலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகள் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளவில்லை” என வல்லப் குறிப்பிட்டுள்ளார்.

”இதன் மூலம் சந்தேசரா சகோதரர்கள் தப்பித்து செல்வதற்கும், அவர்களுடன் வியாபாரம் செய்து அவர்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளவும் ஒன்றிய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உதவி இருப்பது புலனாகிறது” என கௌரவ் பல்லவ் தெரிவித்துள்ளார்.

”ஏன் சந்தேசரா சகோதரர்களை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வர மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்புகிறது. மற்ற கடன்காரர்கள் மற்றும் பொருளாதார குற்றவாளிகளிடம் இதே போன்ற நடைமுறையை வங்கிகள் மற்றும் ஒன்றிய அரசின் முகமைகள் மேற்கொள்ளுமா?” என வல்லப் கேள்வி எழுப்பியுள்ளார்.

சந்தேசரா சகோதரர்களைத் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக மோடி அரசு கருதும் நிலையில், அவர்களுடன் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகம் செய்வது ஏன்? என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப் கூறியுள்ளார்.

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்