Aran Sei

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப முயற்சி – சட்லெஜ், யமுனா இணைப்பைக் கையில் எடுத்த பாஜக

Image Credits: National Herald

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து 26 நாட்களாக விவசாயிகள் போராடிவரும் நிலையில், பாஜக அரசு அனைத்து வரம்புகளையும் மீறுகிறது என்று ஹரியானா காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குமாரி செல்ஜா குற்றம் சாட்டியுள்ளார்.

“டெல்லி எல்லைகளில் கடந்த 26 நாட்களாகப் பாஜக அரசின் விவசாய எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர், ஆனால் அது பாஜக அரசு மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. உணர்வின்மைக்கான அனைத்து வரம்புகளையும் அரசு கடந்துவிட்டது” என்று குமாரி செல்ஜா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் உரிமைகளைப் பறித்து, விவசாய பொருளாதாரத்தை பெரும் முதலாளிகளிடம் ஒப்படைக்க பாஜக அரசு விரும்புவதாக  குற்றம் சாட்டியுள்ளார்.

“முதலாளிகள் விவசாயத் துறையில் நுழைந்தால் விவசாயிகளின் எதிர்காலம் முடிவுக்கு வரும். ஒரு சில தொழில்துறை நிறுவனங்களின் நலனுக்காக நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டுவதே அரசின் நோக்கமாகவும் கொள்கையாகவும் உள்ளது. மத்திய அரசு விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுபோல் நடித்து வருகிறது. ஆனால் உண்மையில், அது விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது” என்றும் செல்ஜா கூறியுள்ளார்.

பஞ்சாபிற்கும் ஹரியானாவிற்கும் இடையே நீரை பகிர்வதில் மோதலை ஏற்படுத்திய சட்லெஜ்-யமுனா இணைப்புக் கால்வாயை விரைவாகக் கட்டுவதற்கு ஆதரவாகப் பாஜக தலைவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதத்தை கடைபிடித்தனர். இதனை குறிப்பிட்டு பேசிய குமாரி செல்ஜா இது ஒரு “நாடகம்” என்று கூறியுள்ளார். பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் இடையே பிரிவை உருவாக்கப் பாஜக இதனை செய்வதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இது ஒரு சதி என்பதை விவசாயிகள் நன்கு அறிவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்