Aran Sei

தேர்தலில் பிரதிபலித்த விவசாயிகளின் கோபம் – ஹரியானாவில் தோல்வியைத் தழுவிய பாஜக கூட்டணி

Image Credit : thewire.in

டிசம்பர் 30 அன்று வெளியான மாநகராட்சி தேர்தல் முடிவுகளில் பாதகமான முடிவுகளுக்கு விவசாயிகளின் போராட்டம் காரணமா என்று, வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டதற்கு, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் “சாமர்த்தியமானவர்களுக்கு சைகை போதும்” என்று பதில் கூறினார்.

நேரடியாக பதில் கூறுவதை தவிர்த்த கட்டார், விபரீத சூழல்களே தேர்தல் தோல்விகளுக்கு காரணம் என்று கூறினார். ஆனால், என்ன சொல்ல வந்தார் என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.

பாஜக முதலில், சோனிபத் மாவட்டத்தின் பரோடா இடைத்தேர்தலில் தோற்றது. தற்போது மாநகராட்சி தேர்தலில் அவமானகரமான தோல்வியை சந்தித்திருக்கிறது. புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற தொடக்க காலத்தில் இவ்வாறு நடப்பதில்லை என்பதைத்தான் தரவுகள் காண்பிக்கின்றன. பாஜக மற்றும் ஜனநாயக மக்கள் கட்சி கூட்டணி அரசாங்கம் பொறுப்பேற்று ஓராண்டு மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

ஹரியானாவில், மேயருக்கும், மாநாகராட்சி உறுப்புகளின் தலைவர்களுக்குமான தேர்தல்கள்  நேரடியாக நடத்தப்படுகின்றன.

டிசம்பர் 27ல் ஏழு உறுப்புகளுக்கு நடந்த  தேர்தலில் பாஜக தான் போட்டியிட்ட  5 இடங்களில் 2 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது.  அதனுடைய கூட்டணி கட்சி தான் போட்டியிட்ட இரண்டு இடங்களில் ஒன்றைக்கூட வெல்ல முடியவில்லை. இரண்டு பெரிய மாநகராட்சிகளிலும் தோற்றுப் போனது கவனிக்கத்தக்கது.

இந்த மாநகராட்சிகளில் 8 லட்சத்திற்கு நெருக்கமாக வாக்களர்கள் இருந்தனவர், அவர்களின் பெரும்பான்மையினர் பாஜகவின் வாக்குவங்கியாக இருந்த நகர்புறத்தை சார்ந்தவர்கள்.

செப்டம்பர் மாதம் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை பிஜேபி மத்திய தலைமை இயற்றிய பின்னர் முடிவு காரணமாக தூண்டப்பட்ட, விவசாயிகளின் போராட்டம் தொடங்கும் வரை களத்தில் எந்த தீவிர அரசியல் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளாத ஆளும் கூட்டணிக்கு இந்த முடிவுகள் பெரும் பின்னடைவாக இருந்தது.

பாஜக தலைவர் வீட்டில் சாணத்தைக் கொட்டி போராட்டம் – விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு

செப்டம்பர் 27அன்று இந்திய ஜனாதிபதி மசோதாக்களுக்கான ஒப்புதல் அளித்ததிலிருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மக்கள் தெருவுக்கு வந்ததன் காரணமாக, இந்த பிராந்தியத்தின் அரசியல் சமன்பாட்டே தெளிவாக மாற்றிவிட்டது. பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஹரியானாவில் பா.ஜ.க.வும் ஜேஜேபியும் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை சந்தித்து வருகின்றன.

முக்கியமாக ஜாட் வாக்கு வங்கியிலிருந்து தஙக்ள் அரசியல் அதிகாரத்தை பெறும் ஜேஜேபி யின் உயர்மட்டத் தலைவர்கள்  விவசாயிகளுடன் தாங்கள் இருப்பதாக ஒரு செய்தியை அனுப்புவதற்கு கடுமையாக மெனக்கிட்டனர். . கட்டார் கூட தனது மாநிலத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) ஆட்சி தொடரும் என்று திரும்பத் திரும்ப அறிக்கைகளை வெளியிட்டார். ஆனால் களத்தில் அவை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஆளும் கூட்டணிக்கு மேலும் சிக்கலாக்கிவிட்டது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் புதிய விவசாய ச் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, கட்டார் அரசாங்கம்  மாநிலத்தின் பல விவசாயத் தலைவர்களை கைது செய்துள்ளதோடு, போராட்டமே எதிர்கட்சிகளின் தூண்டுதலின் பெயரால் நடக்கிறது என்று பிரச்சாரம் செய்தது.

டெல்லி நோக்கி விவசாயிகள் : மீண்டும் போலீசின் கண்ணீர் புகைக்குண்டு, தண்ணீர் பீரங்கி, லத்தி

நவம்பர் கடைசி வாரத்தில் விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறுவதை தடுக்க ஹரியானா போலீசார் செய்யும் காட்சிகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் நினைவுகளில் நிரந்தரமாக நின்றுவிட்டது

டெல்லியின் எல்லைகளுக்கு கிளர்ச்சி மாற்றப்பட்டபின்னர் மேலும் பல ஹரியாணா விவசாயிகள் இணைந்து கொண்டதன் விளைவாக  ஐயத்திற்கிடமின்றி ஹரியானா நகராட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகள் ஆச்சரியப்படுத்தவில்லை.

சோனிபட் மேயர் பதவியை 13,817 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக இழந்தது. அம்பாலா நகரம் நீண்ட காலமாக கட்சியின் செல்வாக்கு மையமாக இருந்து வந்தும், மூத்த அமைச்சர் அனில் விஜ்-ன் சொந்த நகரமாக இருந்தும்,  அம்பாலாவில் பாஜக அவமானகரமான தோல்வியை சந்தித்தது. அதுவும் சுயேச்சை வேட்பாளரிடம்.

சம்ப்லா (ரோதக் மாவட்டம்) நகராட்சி பிரிவில் மற்றொரு சுயேட்சை வேட்பாளர் பாஜக வேட்பாளரை 4,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பஞ்ச்குலாவின் மேயர் பதவி மற்றும் ரேவாரி நகராட்சி மன்றத்தின் தலைவர் பதவி ஆகியவை மட்டுமே காவிக் கட்சிக்கு ஆறுதல் பரிசாக கிடைத்தது. இதில் இரண்டாவதில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பு – ராணுவ அணிவகுப்பிற்கு இணையாக விவசாயிகள் நடத்த முடிவு

மறுபுறம், ஜேஜேபி கட்சியின் தலைவர்கள் கணிசமான செல்வாக்கு கொண்டிருந்த பகுதி என கருதப்பட்ட ஹிசார் மாவட்டத்தில் உள்ள உக்லானா நகராட்சிக் குழுவை இழந்தது. துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, ஹிசார் தொகுதி எம்.பி.,யாக இருந்தார். ரேவாரி மாவட்டத்தில் உள்ள மற்றொரு நகராட்சி அமைப்பான தருஹெராவில், ஜேஜேபி வேட்பாளர் ஆறாவது இடத்திற்குதான் வர முடிந்தது

எதிர்க்கட்சிகளை விட பா.ஜ.க அதிக கவுன்சிலர்களை வென்றாலும், அது உயர்மட்ட பதவியை இழந்ததன் காரணமாக அதன் மதிப்பு குறைவெனவே கருத வேண்டியிருக்கிறது.

“பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள கிராமங்களும் நகரங்களும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன”

சண்டிகரைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் பேராசிரியர் அசுதோஷ் குமார் தி வயர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ”பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பெரும்பாலான நகர்ப்புற வாசிகள் கூட கிராமப்புற வேர்களுடன் இன்னும் ஆழமாக தொடர்பில் உள்ளனர். உதாரணமாக ஹரியானாவில் ஏராளமான அரசு ஊழியர்கள் இன்னும் கிராமங்களில் நிலம் வைத்திருப்பதன் காரணமாக, அவர்கள்  கிராமப்புறங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.” என்று கூறுகிறார்.

மேலும், அவர் குறிப்பிடும் போது,  ”பஞ்சாப்பில் இதே நிலை தான் உள்ளது என்றார். வெளிநாட்டில் குடியேறிய பஞ்சாபிகள் கூட, தங்கள் வேர்களை மறக்காமல், தங்கள் சொந்த ஊர்களில் வசிக்கும்  இதர மக்களுக்கு உதவ முயற்சிசெய்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், டெல்லியின் எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு ரேஷன் மற்றும் இதர பொருட்களை அவர்கள் அனுப்பி  உதவி வருகின்றனர். இதுவே ஒருபானை ஒரு சோறு பதம் என்பது போன்ற அவர்களுக்கு கிராமத்தோடு இருக்கும் தொடர்புக்கு சான்று” என்று கூறும் அவர், ” எனவே, இந்த இயக்கம் கிராமப்புறப் பகுதிகளின் எல்லைகளுக்கு அப்பால் சென்றுவிட்டது என்பது இயற்கையானதுதான். விவசாய சட்டங்களால், ஆளுங்கட்சிக்கு எதிராக, கடும் அதிருப்தி நிலவுகிற நிலைமையில், ஹரியானாவின் நகராட்சி அமைப்புக்களின் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிக்கவில்லை.” என்கிறார்.

பிரதமரை நம்பாத விவசாயிகள் – நரேந்திர மோடியின் வாய்வீச்சு வீரியம் இழக்கிறதா?

மூத்த பத்திரிகையாளர் ஹமீர் சிங், ” இந்த போராட்டம் இனி விவசாயிகள் என்ற வரம்புக்குள் மட்டுமில்லை. இது ஒரு மக்கள் இயக்கமாக மாறி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை ஈர்க்க தொடங்கியிருக்கிறது. நேரடியாக போராட்டத்தில் பங்கேற்க முடியாதவர்கள் கூட அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்” என்றார்.

பஞ்சாபில் ஏற்கனவே அகாலிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட போதே, இயக்கத்தின் அரசியல்ரீதியான தாக்கத்தை உறுதி செய்துவிட்டது. அதன்பின்னர், பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் மத்திய சட்டங்களை எதிர்ப்பதற்கு சட்டமன்றத்தில் மாநில மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஒன்றுபட நேர்ந்தது.

ஹரியானாவில், பா.ஜ.க தலைவர்கள் சட்லஜ் யமுனா இணைப்பு (SYL) கால்வாய் விவகாரத்தை  கையிலெடுத்து வேளாண் சட்டங்களுக்கான எதிர்ப்புக்களை எதிர்கொள்ள முயன்றனர், ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை.

விவசாய போராட்டங்கள் இரு மாநிலங்களிலும் பாரம்பரிய அரசியல்  போக்கிலிருந்து திசைமாற்றம் நிகழ்வதை குறிக்க தொடங்கியிருக்கிறது என்று  ஹமீர் சிங் நம்புகிறார். புதிய போக்குகள் என்ன என்பது எதிர்காலத்தில் தான் தெரியும், ஆனால் பாஜகவின் தேர்தல் தோல்விகள் ஒரு சமிங்ஞையை வழங்குகின்றது என்றும் கூறினார்

பஞ்சாபிலும் 2022 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களுக்கு முன்பே நகராட்சி தேர்தல் நடக்க இருக்கின்றன. பாஜக கூட்டணி இல்லாமல் களத்தில் நிற்க, ஆம் ஆத்மி கட்சியும் தொடை தட்டி களத்தில் இறங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும் இந்த சூழல் களத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறது

ஜேஜேபி மீது கூடும் அழுத்தம், காங்கிரஸுக்கு ஒரு செய்தி குறிப்பால் உணர்த்துகிறது

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில பாஜக தலைவர்கள் விவசாயிகளின் கோபத்தை தொடர்ந்து எதிர்கொள்ளும் நிலையில், ஜேஜேபி மீதும் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

ஜேஜேபியின் பிரதான வாக்கு வங்கியான ஜாட் சாதியினர் ஹரியானாவில் ஆதிக்கம் செலுத்தும் விவசாய சமூகமாகும். பஞ்சாபில் அகாலிகள் செய்தது போலவே, பா.ஜ.க தலைமையிலான அரசை விட்டு வெளியேறி, போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு பல சமூக உறுப்பினர்கள் கட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு, ஜேஜேபியின் 10 ஜேஜேபி எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால், கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற எண்ணத்தை  அவர்களால் விவசாயிகளுக்கு ஏற்படுத்த முடியவில்லை

டெல்லியின் கடுங்குளிரில் சிக்கியுள்ள விவசாயிகள் : கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசு

டிசம்பர் 24 அன்று, துணை முதல்வர் துஷ்யந்த் செளதாலாவின் திட்டமிடப்பட்ட வருகைக்கு முன்னதாக, ஜிந்தில் உள்ள ஒரு தற்காலிக ஹெலிபேட்  ஒன்றில் விவசாயிகள் குழு தோண்டி விட்டனர். அப்போது,  விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பாஜகவின் அதிகார வெறிக்கு துணை போகிறது என்று தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஜேஜேபியை குற்றம் சாட்டி வருகிற நிலையில், ஜேஜேபி மாநிலத் தலைவர் நிஷான் சிங் தி வயர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியின் கற்பனைகளுக்கு ஏற்ப நாங்கள் வேலை செய்ய முடியாது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எமது உயர்மட்ட தலைவர்கள் ஏற்கனவே அறிக்கைகளை வெளியிட்டு ள்ளதோடு, அவர்களின் பிரச்சினைகளை தீவிரமாக பரிசீலித்து முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணுமாறு பா.ஜ.க.வின் மத்திய தலைமையையும் கேட்டுக் கொண்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

தற்போதைய நிலைமை நிச்சயமாக நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என்று கூறிய அவர், கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் சாலைகளில் முகாமிட்டுள்ளனர். ”எனவே, இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்து, விரைவில் தீர்வு காண வேண்டும்” என்றார்.

மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஜேஜேபி அரசை விட்டு விலகுமா என்று கேட்டதற்கு, “அரசை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே ஒன்றை சாதிக்க முடியும் என்பது உண்மையல்ல. விவசாயிகளுக்கு ஏற்கனவே உதவி செய்து வருகிறோம், அரசின் உள்ளிருந்தே அவர்களின் இலட்சியத்தை முன்னிலைப்படுத்துகிறோம்” என்றார்.

ஜேஜேபி, ஜாட் தலைவர் தேவிலாலின் பேரன்களால் உருவாக்கப்பட்ட கட்சி, 2019 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மை இல்லாத போது, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக காவி கட்சியோடு அது இணைந்தது.

இதற்கிடையில், இந்த முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு செய்தி உள்ளது. அது ஒற்றுமையாக இருந்து, முன்னோக்கி நகர சரியான வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா செல்வாக்கு செலுத்தும், சோனிபட் நகரில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அம்பாலாவில் அது மோசமாக தோல்வி அடைந்தது. பஞ்ச்குலாவிலும் ஒரு வாய்ப்பை இழந்தது. இந்த இரண்டும் மாநில தலைவர் குமாரி செல்ஜாவின் அம்பாலா பாராளுமன்ற தொகுதியில் உள்ளன.

ஹூடா ஒரு ஊடக அறிக்கையின் வழியாக பஞ்ச்குலா மற்றும் அம்பாலாவில் நடந்த தோல்விகளைப் பற்றி கட்சி ஆய்வு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது கட்சியில் குழுவாதம் இருப்பது வெட்டவெளிச்சமானது.  இந்த நகரங்களில் பிரச்சாரம் செய்ய கூட ஹூடா அழைக்கப்படவில்லை என்றும் அவரது ஆட்கள் கூறினர்.

பல்வேறு முகாம்கள் ஒருங்கிணைந்து ஒரு ஐக்கிய முன்னணியை ஏற்படுத்தினால், மாநிலத்தில் காங்கிரஸ் சிறப்பான வெற்றியை சாதிக்க முடியும் என்ற கருத்து பரவலாக அரசியல் ஆய்வாளர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் உள்ளது.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்