Aran Sei

’அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்றுக்கொள்ளும்’ – பாஜக மேலிடப் பொறுப்பாளர்

கூட்டணியின் பெரிய கட்சியான அதிமுக முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வார்கள் என்றும் அவரை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என்று அக்கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

’அதிமுக தலைமையை ஏற்பவர்களுக்கே கூட்டணியில் இடம்’ – எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில், “பாஜக அகில இந்தியக் கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்” என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  கூறியிருந்தார்.

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய  மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. முனுசாமி, “அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்.” என்று உறுதிப்படுத்தியிருந்தார்.

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – குளறுபடிக்கு முற்று வைத்த கே.பி. முனுசாமி

அதேநேரம், டிசம்பர் 25 ஆம் தேதி, செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா என்ற  கேள்விக்கு பதிலளிக்க மறுத்திருந்தார்.

கடந்த மாதம் சென்னை வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி,மிழக முதல்வர் வேட்பாளர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் தெரிவித்திருந்தார்.

’தான் ‘ முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி மட்டும் தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்’ – ஸ்டாலின்

இந்நிலையில், நேற்று (ஜனவரி 11) குமரியில் பொங்கல் விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் ஆள்கிறார். அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முடிவு செய்துள்ளது. அதுபோல பாஜகவும் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யும்,” என்று தெரிவித்திருந்தார்.

மறுபுறம், திருச்சியில் பேட்டி அளித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, முதல்வர் வேட்பாளரை அதிமுகவே முடிவு செய்யும் என்றும், “கூட்டணியில் அதிமுக மேஜர் பார்ட்னர். அவர்கள் முடிவெடுப்பதை மைனர் பார்ட்னரான பாஜக ஏற்றுக்கொள்ளும் என்றும் உறுதியளித்துள்ளார்.

’தமிழக முதல்வர் வேட்பாளரை தேர்தலுக்கு பின்பே அறிவிப்போம்’ – பாஜக மேலிடம்

இதன் வழியாக, அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து குழப்பம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்