Aran Sei

பீகாரில் இஸ்லாமிய சிறுமி எரித்துக் கொலை – ராகுல் காந்தி கண்டனம்

credits : india tomorrow

பீகாரில் திருமணம் நிச்சயக்கிப்பட்ட 19 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி பீகார் மாநிலம் வைஷாலி எனும் இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைப் பலனின்றி நவம்பர் 15-ம் தேதி மரணமடைந்துள்ளார் என தி பிரிண்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், அலட்சியமாக செயல்படுவதாகவும் சிறுமியின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

இறந்த மகளின் சடலத்துடன் போராட்டம் நடத்திய அவர் சதிஷ்குமார் என்பவர் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்ளக் கூறி வெகுநாட்களாக தொல்லை கொடுத்ததாகவும் தன்னுடைய மகள் இஸ்லாமியர் என்றும் திருமணம் ஏற்கனவே நிச்சயமாகி உள்ளது என கூறி மறுத்த நிலையில், சதீஷ் அவரை தீயிட்டு கொளுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார் என தி பிரிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

”இந்த சம்பவம் நடந்து 17 நாட்கள் கடந்துவிட்டது.எங்களுக்கு நீதி வேண்டும். தையல் தொழில் செய்து பிழைத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. திருமணத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த போன்று நடந்துவிட்டது” என்று அந்த பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக குப்பைக் கொட்ட செல்லும்போதெல்லாம் பாலியல் ரீதியான சீண்டலுக்கும் தொல்லைகளுக்கும் தன்னுடைய சகோதரி ஆளானதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரி கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் சதிஷ்குமார் ராய் அவரது தந்தை வினோத் ராய் மற்றும் அவரது உறவினர் சந்தன் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தண் மரணப்படுக்கையில் தன்னுடைய மரண வாக்குமூலத்தை ஒரு காணொலி மூலம் பதிவு செய்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் பாதிக்கப்பட்ட பெண் “நான் மாலை ஆறு மணியளவில் குப்பை கொட்டுவதற்காக, குப்பை கிடங்கிற்கு சென்றிருந்தேன். அப்போது என்னை பின் தொடர்ந்து வந்த சதீஷ் (அவரது தந்தை, அவரது உறவினர்) அவனுடன் வரவில்லையென்றால் கொன்று விடுவதாக மிரட்டினான். எனக்கு திருமணம் நிச்சயமிக்கப்பட்டுள்ளது  என்று கூறினேன். உடனே கோபமான அந்த மூவரும் என் முடியைப் பிடித்து தரதரவேனே இழுத்து என் மீது மண்ணெனயை ஊற்றி பற்ற வைத்து ஒரு குழிக்குள் தூக்கி வீசினர். என்னுடைய அலறலை கேட்ட என் தங்கையும் கிராமவாசிகளும் என்னை மருத்துவமனையில் சேர்த்தனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை காதலித்து திருமணம் செய்வது மதமாற்ற வேலை என்றும் லவ் ஜிகாத் என்றும் குற்றம்சாட்டி வந்த வலதுசாரிகளிடம், இந்து ஆண் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி கொலை செய்ததற்கு பெயர் என்ன என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

 

இந்த சம்பவத்திற்கு இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்சில் உட்பட பல்வேறு அமைப்புகளும் தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பீகார் தேர்தலுக்காக இந்தச் சம்பவம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

வைஷாலியின் காவல்துறை கண்காணிப்பாளர் ( எஸ்.பி ) மகேஷ், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்து ஓடிவிட்டதால் கைது தாமதமவதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 30 மாலை நடந்த சம்பவத்திற்கு நவம்பர் 2 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார். “குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைத் துன்புறுத்தியதாக சிறுமி கூறியிருந்தார், ஆனால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளரா என்பது விசாரணையில்  தெரியவரும்” என காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்