Aran Sei

பீகார் தேர்தல் – “கிரிமினல் ரெட் அலெர்ட் தொகுதிகள் 89%” : ஏடிஆர்

Image Credit : adrindia.org

பீகார் சட்டப் பேரவை தேர்தலில், 89% தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தமக்கு எதிராக கிரிமினல் வழக்கு உள்ளதாக பதிவு செய்துள்ளனர் என்று “ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு” (ADR) நடத்திய பகுப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது.

மூன்று கட்டங்களாக நடைபெற்று வரும் பீகார் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 3,733 வேட்பாளர்களில் 3,722 வேட்பாளர்களின் மனுக்களை ஆய்வு செய்ததில் அவர்களில் 32% பேர் தமக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளதாக உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக கூட்டமைப்பின் ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது. 11 வேட்பாளர்களின் உறுதிமொழிப் பத்திரம் அறிக்கையை தயாரிக்கும் நேரத்தில் கிடைக்கவில்லை என்றும் அவ்வமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஏடிஆர் அமைப்பு நேற்று வெளியிட்ட இந்த பகுப்பாய்வு அறிக்கையில் இந்தத் தரவுகளும் இது தொடர்பான அவ்வமைப்பின் கருத்துகளும் தரப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளை ஏடிஆர் அமைப்பின் இணையதளத்தில் (ஆங்கிலத்தில் அல்லது இந்தியில்) வாசிக்கலாம். (https://adrindia.org)

பீகார் சட்டப் பேரவைக்கான தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 28-ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறவுள்ளது. மூன்றாம கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற பிறகு வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10-ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கொரோனா காலத்தில் பீகார் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

2015 தேர்தலில் கிரிமினல் வழக்கு இருப்பதாக பதிவு செய்த வேட்பாளர்களின் சதவீதம் 30% ஆக இருந்தது 2020-ல் 32% ஆக உயர்ந்திருக்கிறது. மிக மோசமான கிரிமினல் வழக்குகள் இருப்பதாக பதிவு செய்தவர்களின் சதவீதமும் 23%-லிருந்து 25% ஆக அதிகரித்திருக்கிறது.

மோசமான கிரிமினல் வழக்குகள் என்பவை

  1. அதிகபட்சம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான சிறைத்தண்டனை வழங்கப்படக் கூடிய குற்றங்கள்
  2. பிணையில் எடுக்க முடியாத குற்றங்கள்
  3. தேர்தல் தொடர்பான குற்றம் (உதாரணமாக, இபிகோ 171E அல்லது லஞ்சம்
  4. அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதோடு தொடர்புடைய குற்றம்
  5. தாக்குதல், கொலை, ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றங்கள்
  6. மக்கள் பிரதிநித்துவ சட்டம் (பிரிவு 8)-ல் குறிப்பிடப்பட்ட குற்றங்கள்
  7. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழான குற்றங்கள்
  8. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

ஆகியவை ஆகும்.

  • பெரிய கட்சிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் (141 வேட்பாளர்களில் 98 பேர்) பாரதிய ஜனதா கட்சியும்  (109 வேட்பாளர்களில் 76 பேர்) 70% கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளன.
  • காங்கிரஸ் கட்சியின் 70 வேட்பாளர்களில் 45 பேர், அதாவது 64% பேர் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்கள்.
  • லோக்ஜனசக்தி கட்சியின் 135 வேட்பாளர்களில் 70 பேர், அதாவது 52% பேர் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்கள்.
  • ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 115 வேட்பாளர்களில் 56 பேர், அதாவது 49% பேர் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்கள்.
  • பகுஜன் சமாஜ் கட்சியின் 78 வேட்பாளர்களில் 29 பேர், அதாவது 37% கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்கள்

தேர்தலில் கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல்கள் அரசியல் கட்சிகள் மீது எந்தத் தாக்கமும் செலுத்தவில்லை என்று ஏடிஆர் கருத்து கூறியுள்ளது.

பீகார்: மோடியை நோக்கி எழுப்பப்பட்ட 11 கேள்விகள்

ஒரு இணையவழி கருத்தரங்கில் இந்த அறிக்கையை வெளியிட்ட ஏடிஆர் அமைப்பின் நிறுவனர் ஜக்தீப் எஸ் சொக்கர், “கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள மூன்று அல்லது அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் ‘சிவப்பு எச்சரிக்கை தொகுதிகள்’ இந்தத் தேர்தலில் 89% ஆக உள்ளது” என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது வழக்கமாக 50% அளவிலேயே இருந்து வந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பீகார் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் எல்லா பெரிய கட்சிகளும் 37% முதல் 70% வரையிலான தொகுதிகளில் கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர் என்பது வேட்பாளர்கள் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரங்களை ஆய்வு செய்வதில் தெரிய வந்திருக்கிறது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு அல்லது ஏடிஆர் 1999-ம் ஆண்டு அகமதாபாத் இந்திய மேலாண்மை கழகத்தின் (IIM Ahmedabad) பேராசிரியர்களால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின் சார்பாக 1999-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல், நிதியியல் மற்றும் கல்வி பின்னணியை வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டது. இதன் அடிப்படையில், தேர்தல்களில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் தமது கிரிமினல், நிதியியல், கல்வி பின்னணிகளை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யும் ஒரு உறுதிமொழிப் பத்திரத்தின் மூலமாக தேர்தலுக்கு முன்பே வெளியிடுவதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது.

2020-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டலில், கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளரை நிறுத்துவதற்கான காரணங்களை தரும்படியும், கிரிமினல் பின்னணி இல்லாத பிற நபர்களை வேட்பாளராக ஏன் தேர்வு செய்ய முடியாது என்று விளக்கும்படியும் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக அறிவுறுத்தியிருந்தது.

இந்தக் கட்டாய வழிகாட்டல்களின்படி, கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களில் வேட்பாளரின் தகுதிகள், சாதனைகள், திறன் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். எனவே, கட்சிகள் குறிப்பிட்டுள்ள அடிப்படையில்லாத, ஆதாரமில்லாத காரணங்களான “நபரின் பிரபலம்”, “நல்ல சமூக பணி செய்கிறார்”, “வழக்குகள் அரசியல் ரீதியானவை” போன்றவை, கறைபட்ட பின்னணிகளைக் கொண்ட வேட்பாளர்களை நிறுத்துவதற்கு உறுதியான காரணங்கள் இல்லை என்று ஏடிஆர் கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசி – பாஜகவின் பீகார் தேர்தல் வாக்குறுதியும் உண்மை நிலவரமும்

“தேர்தல் முறையை சீர்திருத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை” என்பதும், “சட்டம் இயற்றுபவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் சட்டத்தை உடைப்பவர்களின் கையில் நமது ஜனநாயகம் தொடர்ந்து பாதிப்படையும்” என்பதும் இந்த தரவுகளில் இருந்து தெளிவாவதாக ஏடிஆர் கவலை தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்