Aran Sei

பீகார் தேர்தல் – படுதோல்வியைச் சந்தித்த எல்ஜேபி – பாதாளத்தில் தள்ளிய சிராக் பஸ்வான்

பீகார் சட்டமன்ற தேர்தலில் ’கிங் மேக்கராக’ இருக்க விரும்பிய லோக் ஜன் சக்தி கட்சியின் (எல்ஜேபி) தலைவர் (மறைந்த மத்திய உணவுத்துறை அமைச்சர் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன்) சிராக் பஸ்வான் கட்சியை அதல பாதாளத்திற்குத் தள்ளி இருக்கிறார்.

லோக் ஜன் சக்தி கட்சியால் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாதநிலையில் 8 தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘அனுமன்’ போல இருப்பேன் என்று சொன்ன சிராக் பஸ்வான் இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார். “குறைந்தபட்சம் 27 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணியிடம் தோல்வியை சந்திக்க, லோக் ஜன் சக்திக்கு விழுந்த வாக்குகளே காரணமாக அமைந்துள்ளன” என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத 25-க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்களுக்கு சிராக் வாய்ப்பளித்துள்ளார். இதில் முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவரான ராஜேந்திர சிங், தினாரா தொகுதியில் 3000-ம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விடைந்துள்ளார். பாகல்பூர் தொகுதியில் காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிட்ட எல்ஜேபியின் துணை மேயர் ராஜேஷ் வர்மா தோல்வி அடைந்துள்ளார்.

ஹசன்பூர் தொகுதியில் தெஜஸ்வி யாதவின் சகோதரரான தேஜ் பிரதாப் யாதவ் வெற்றி அடைவதற்கான காரணமே லோக் ஜன் சக்தி பெற்ற பத்தாயிரம் ஒட்டுக்களே என்று கூறப்படுகிறது.

லோக் ஜன் சக்தியைக்  குறைந்தபட்சம்10 தொகுதியில் வெற்றிப் பெற வைக்கவும், ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றியை 60 தொகுதிகளிலாவது சீர்குலைக்க நினைத்த பஸ்வானுக்கு தேர்தல் முடிவுகள் பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளனர்.

லோக் ஜன் சக்தி 2000-ம் ஆண்டு உருவானதிலிருந்து, தனியாகத் தேர்தலைச் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். பிப்ரவரி 2005-ல், அந்த கட்சி 178 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களைக் கைபற்றியது. இது கிட்டத்தட்ட 18 சதவீத வாக்குகள் ஆகும்.  ஆனால் சில மாதங்களுக்குள், அந்த கட்சி பலவீனமடைந்தது. அடுத்த தேர்தலில் அவர்கள்  203 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களை மட்டுமே வென்று 11.10 சதவீத வாக்குகளைப் பெற்றனர்.

இந்தத் தேர்தல் முடிவுகள் இரண்டு தேர்தல்களிலிருந்தும் சற்றே மாறுபட்டுள்ளது . 2015-ம் ஆண்டை விட அவர்கள் வாக்கு சதவீதம் 4.83 சதவீதத்திலிருந்து 5.63 சதவீதமாக அதிகரித்ததுள்ளது.

லோக் ஜன் சக்திக்கு இந்தத் தோல்வி மிகவும் மோசமான காலகட்டத்தில் வந்துள்ளது. கடந்த அக்டோபர் 8-ம் தேதி அந்த கட்சியின்  நிறுவனர் ராம்விலாஸ் பஸ்வான் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல்முடிவுகள் லோக் ஜன் சக்திக்கு பல முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராகும் பட்சத்தில் பீகாரில் எல்ஜேபியின் நிலைபாடு என்னவாக இருக்கும்? தேசிய ஜனநாயக கூட்டணி, தேர்தலில் இவ்வளவு பின்னடைவுகளை சந்திக்க காரணமான எல்ஜேபியை மன்னித்து, ராம்விலாஸ் பஸ்வானின் மரணத்தால் காலியாக இருக்கும் ராஜ்யசபா இடத்தை சிராக் பஸ்வானுக்குப் பாஜக அளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்