பாபா ராம்தேவ் ஒரு யோகா குருதானே அன்றி, யோகி அல்ல என்றும் ஒரு யோகி என்பவர் தனது அனைத்து புலன்களையும் திறன்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் பீகார் மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், பாபா ராம்தேவ் பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. அதில், “அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல். அலோபதி மருந்துகளை உட்கொண்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்டனர். ரெம்டெசிவிர், ஃபாவிஃப்லு மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் கொரோனாவிற்கு எதிரான சிகிச்சையில் தோல்வியுற்றது.” என்று ராம்தேவ் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, நேற்று (மே 26) அல்லோபதி மருத்துவம் மற்றும் மருத்துவர்கள்குறித்து ராம்தேவ் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து, நேற்று (மே 26), பிகார் மாநில பாஜக தலைவரும், மருத்துவருமான சஞ்ஜய் ஜெய்ஸ்வால் பேசுகையில், “ராம்தேவ் ஒரு யோகா குரு. அவரது யோகா நிபுணத்துவம் குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், அவர் ஒன்றும் யோகி அல்ல. ஒரு யோகி என்பவர் தனது அனைத்து புலன்களையும் திறன்களையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பவர்.
“அவர் யோகாவிற்கு செய்துள்ளதை, கோகோ கோலா நிறுவனம் குளிர் பான சந்தையில் செய்ததோடு ஒப்பிடலாம். பல காலங்களாக, இந்தியர்கள் ஷிகஞ்சி, தண்டைப் போன்ற மரபான பானங்களை அருந்தி வந்தனர். ஆனால், கோகோ கோலா போன்ற ஒரு பெருநிறுவனத்தின் வருகைக்குப் பின், ஒவ்வொரு வீட்டிலும் பெப்சி மற்றும் கோக் பாட்டில்கள் நிறைய தொடங்கின.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாபா ராம்தேவ்வுடன் பிரச்சினையை வளர்க்க வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கத்தை வலியுறுத்திய சஞ்ஜய் ஜெய்ஸ்வால், “இது போன்ற அற்ப விஷயங்களுக்காக நம்முடைய ஆற்றல்களை நாம் துண்டிக்கக் கூடாது. நாம் நம்முடைய உன்னதத் தொழிலில் கவனம் செலுத்துவோம்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.
source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.