ஸ்ரீநகரில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் ஹாஜி பர்வேஸ் அஹ்மதை தீவிரவாதிகள் தாக்க முயன்றபோது காவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத அந்தத் தீவிரவாதிகள் ஹாஜி பர்வேஸ் அஹ்மதின் வீட்டை நெருங்கி, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீநகரின் நாடிபோரா பகுதியில் அமைந்துள்ள ஹாஜி பர்வேஸின் வீட்டுக்குள் அவர்கள் நுழைய முயற்சித்ததாகக் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“மற்றொரு பாதுகாப்பு அதிகாரி வினையாற்றாமல் இருந்திருந்தால், அவர்கள் என் வீட்டிற்குள்ளே நுழைந்திருப்பார்கள்” என்று ஹாஜி பர்வேஸ் கூறியுள்ளார்.
தாக்கப்பட்ட காவலர் மன்சூர் அஹமத் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், அடிவயிற்றில் ஏற்பட்ட காயங்களால் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தைக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் எதிர்க்கட்சித் தலைவர்களின் பாதுகாப்பைக் குறைத்து வருகிறதென்றும் குற்றம் சாட்டிய அவர். கொடுக்கப்பட்ட பாதுகாப்பு போதுமானதாக இல்லாததால்தான் பல தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Strongly condemn the attack on PDPs Haji Parvez.J&K admin has left opposition leaders in a vulnerable position by downgrading their security. Lapses are likely to occur since protection given is inadequate. My heartfelt condolences to Manzoor Ahmed’s family
— Mehbooba Mufti (@MehboobaMufti) December 14, 2020
காவல் துறை தலைமை இயக்குனர் தரப்பு விளக்கம்
மெஹபூபா முப்தியின் குற்றச்சாட்டுக்குக் காவல் துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) தில்பாக் சிங் பதிலளித்துள்ளார். “ஹாஜி பர்வேஸ் இருக்கும் இடம் தீவிரவாது தாக்குதலுக்கு உட்பட பகுதி என்பதால் இருப்பிடத்தை மாற்றுமாறு அவரிடம் முன்பே கேட்டுக்கொள்ளப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.
ஹாஜி பர்வேஸ் தொடர்ந்து பாதுகாப்பு ஆலோசனைகளை மீறியுள்ளதாகவும், அவரது நிலைமையைப் புரிந்துகொண்டு அவருக்காக இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“சம்பந்தப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பாதை குறித்து சில தடயங்களைக் காவல்துறை கண்டறிந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவில் வழக்கு பதியப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
“கோழைத்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன். தனது உயிரைத் தியாகம் செய்த அதிகாரிக்குத் தலை வணங்குகிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.