Aran Sei

சித்திக்கிற்கு ஒரு நீதி, அர்னாப் கோசாமிக்கு ஒரு நீதியா? – கபில் சிபல் கேள்வி

ரிபப்ளிக் டிவியின் மூத்த ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் மனுவை உடனே விசாரித்து ஜாமுன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், சித்திக் காப்பானின் வழக்கை விசாரிக்காமல் இருப்பது ஏன் என கபில் சிபல் கேள்வியெழுப்பியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வே நாயக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு ”உயர் நீதிமன்றங்கள் தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக இந்த (மகாராஷ்ட்ரா அரசு தரப்பு வழக்கறிஞர்) வழக்கை நடத்தி வந்த கபில் சிபல், தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தி அர்னாப்புக்கு பிணையளித்துள்ள உச்ச நீதிமன்றம், பத்திரிகையாளர் சித்திக்கின் வழக்கை விசாரிக்காமல் அலைக்கழிப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார்.

சித்திக்கு எதிராக காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளிலிருந்து அவரை ஜாமீனில் விடுவிக்க, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 32 ன் படி உச்ச நீதிமன்றத்திற்கு வந்தோம். ஆனால் உச்ச நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள் என அறிவுறுத்தி, இந்த மனுவின் விசாரனையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது என தெரிவித்துள்ள கபில் சிபல் இதனால் கடந்த ஒரு மாதமாக அவர் சிறையில் இருந்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

சித்திக் காப்பான் டெல்லியில் உள்ள ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் செய்தியாளராக வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 5-ம் தேதி ஹத்ராஸ் சம்பவத்தை பற்றி தகவல் சேகரிக்கச் சென்ற சித்திக் ”பொது அமைதிக்கு குந்தகம்” ஏற்படுத்துவதாகக் கூறி உத்தர பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் செய்தி சேகரிக்க பயணித்த சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது, ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்திக்கினுடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் ஒரு பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் வந்துள்ளதாக, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது மதுரா காவல்துறை. அவர் மீது தேசதுரோக வழக்கும், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டமும் (UAPA) போடப்பட்டுள்ளன.

சித்திக்கின் மனைவி ராய்ஹானாத் மற்றும் அவரது வயதான தாயாரைக் கூட சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு சிறைபடுத்தப்பட்டுள்ளார் சித்திக். இந்நிலையில் சித்திக்கின் வழக்கு விசாரிக்கப்படாமல் இருப்பதால் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்