மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக, அக்குழுவின் உறுப்பினர் புபிந்தர் சிங் மான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருப்பதால், இந்த மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களையும், போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி தாக்கல் செய்த பல்வேறு மனுக்களையும், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு ஜனவரி 12ஆம் தேதி விசாரித்தது.
விசாரணைக்குப் பின், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “இந்த போராட்டங்களால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கை பற்றியும் அவர்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவது பற்றியும் நாங்கள் கவலை கொள்கிறோம். எங்களிடம் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விவசாய பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கிறோம். அந்த வகையில், எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் ஒன்று, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிப்பது. மேலும், ஒரு குழுவை உருவாக்குவது தான். இதை நாங்கள் இப்போது செய்கிறோம்.” என்று கூறினார்.
விவசாயிகள் போராட்டம் : பிரச்சனைக்கு காரணமே நீங்கள் தானா ? – உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி
மேலும், “இந்தக் குழு நமக்காக உருவாக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் (போராடும் விவசாயிகள்) இந்த குழுவின் முன் வந்து உரையாடலாம். இது உத்தரவுகளையோ தண்டனைகளையோ உங்களுக்கு வழங்காது. மாறாக, அது எங்களுக்கு (உச்ச நீதிமன்றத்திற்கு) இந்த விவசாய சட்ட பிரச்சனையைப் பற்றி ஒரு அறிக்கையை மட்டுமே சமர்ப்பிக்கும்.” என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உறுதியளித்திருந்தார்.
விவசாய சட்டங்களுக்கு இடைக்கால தடை – பிரச்சனையை தீர்க்க தனி குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் விவசாய பொருளாதார நிபுணர்களான அசோக் குலாட்டி, பிரமோத் குமார் ஜோஷி, அனில் கன்வத், புபிந்தர் சிங் மான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
‘உச்சநீதிமன்றம் ஏமாற்றி விட்டது’ – போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவிப்பு
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ள பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த புபிந்தர் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நான், ஒரு விவசாயியாகவும் விவசாய சங்க தலைவராகவும் செயல்பட்டு வருகிறேன். பொதுமக்களிடையே நிலவும் உணர்வுகள் மற்றும் கருத்துக்களுகு மதிப்பளித்து, பஞ்சாப் மற்றும் தேசத்தில் உள்ள விவசாயிகளின் நலன்களில் சமரசம் ஏற்படாமல் எனக்கு வழங்கப்படும் எந்தவொரு பதவியையும் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். நான் இந்த குழுவிலிருந்து விலகுகிறேன், நான் எப்போதும் எனது விவசாயிகள் மற்றும் பஞ்சாபுடன் நிற்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
S. Bhupinder Singh Mann Ex MP and National President of BKU and Chairman of All India Kisan Coordination Committee has recused himself from the 4 member committee constituted by Hon'ble Supreme Court pic.twitter.com/pHZhKXcVdT
— Bhartiya Kisan Union (@BKU_KisanUnion) January 14, 2021
பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய தலைவரான புபிந்தர் சிங் மான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.