Aran Sei

பீமாகோரேகான் வழக்கில் சிறையிலுள்ள பேராசிரியர் ஹனி பாபுவிற்கு கொரோனா தொற்று – உரிய சிகிச்சையளிக்க குடும்பத்தினர் வேண்டுகோள்

பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, டெல்லி பல்கலைக் கழக, இணைப் பேராசிரியர் ஹனி பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகிவுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு,  ஜூலை 28 ஆம் தேதி, பீமா கோரேகான் வழக்கில் பேராசிரியர் ஹனி பாபு குற்றம்சாட்டப்பட்டு தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது அவர் ஜே.ஜே மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“என் கணவரின் அடிப்படை உரிமைகளை பறிக்காதீர்கள்; அவருக்கு சிகிச்சை அளியுங்கள்” – ஹனி பாவுவின் மனைவி வேண்டுகோள்

இதற்கு முன்னர், அவரது கண்பார்வையில்  ஏற்பட்டுள்ள தீவிர பாதிப்பிற்கு சிறை நிர்வாகம் உரிய சிகிச்சையளிக்கவில்லை என்று அவரது மனைவி ஜென்னி ரொவேனா குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், கடந்த மே 12 அன்று, அவரது உடல் நலன்குறித்து அவரது மனைவி வெளியிட்டிருந்த அறிக்கையில்,  “கடந்த சில நாட்களாக நாங்கள் பதட்டத்தோடு இருக்கிறோம். அடிப்படை தேவைக்காகவே இந்தளவுக்கு மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது என்பதே கடும் மன உளைச்சலை தருகிறது. பல அழைப்புகளுக்குப் பின்னரும் சிறையிலிருந்து இன்றைக்கும் உரிய பதிலை நாங்கள் பெற முடியவில்லை. ரகசிய பாணியில் இயங்கும் இந்த அமைப்புமுறை, சரி செய்யவே முடியாத பாதிப்புகளைச் சிறைவாசிகளுக்கு ஏற்படுத்தி விடக்கூடும். ஆகவே,  தீவிரமான பாதிப்புகளின்போது உடனடியாக உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை  இருக்க வேண்டும் என்று கோருகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் வேண்டுவது, இந்திய அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியிருக்கிற உரிமைகளைத்தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பீமா கோரேகான் வழக்கு : சிறையில் உள்ள செயற்பாட்டாளர்களை விடுவிக்க கோரி மகாராஷ்ட்ர முதல்வருக்கு குடும்பத்தினர் கடிதம்

இந்நிலையில், பேராசிரியர் ஹனி பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறித்து தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், “ஹனி பாபுவின் உடல் நலன்குறித்து எங்கள் வழக்கறிஞர் கொடுத்த எண்ணற்ற மனுக்களுக்குச் சிறை நிர்வாகம் பதிலளிக்கவில்லை. மேலும், அவரது கண் சிகிச்சை மற்றும் கொரோனா சிகிச்சைக்காக அவரை உயர் மருத்துவவசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு மாற்ற உள்துறை அமைச்சர் திலிப் வால்ஸ் பாட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான மொத்த செலவை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்