Aran Sei

‘கோடை வெயிலுக்கு அஞ்சி வீடு திரும்ப மாட்டோம்; மின்விசிறிகளோடு களத்தில் இருப்போம்’ – ராகேஷ் திகாயத்

விவசாயிகளின் போராட்டத்திற்கு எவரேனும் ஆதரவு குரல் கொடுத்தாலோ, உதவி செய்தாலோ, அமலாக்க துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்களால் அவர்கள் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 24), டெல்லியில் நடந்த மகாபஞ்சாயத்தில் பங்கேற்று பேசியுள்ள ராகேஷ் திகாயத், டெல்லி டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைக்கு பின்னர், அது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளைப் பற்றி குறிப்பிடுகையில், “விவசாயிகள் இது போன்ற வழக்குகளுக்கு அஞ்சமாட்டார்கள். இந்த சட்டங்கள் மத்திய அரசு திரும்பப் பெறும் வரையிலும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் கிடைக்கும் வரையிலும் இந்த போராட்டம் தொடரும்.” என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம் – ராகேஷ் திகாயத்

“இந்தப் போராட்டம் நவம்பர்-டிசம்பர் வரை போகும். வரும் கோடை காலத்தில் விவசாயிகள் வீடு திரும்புவார்கள் என்று மத்திய அரசு கருதுகிறது. முன்பு, நாங்கள் குளிர்காலத்தில் வீடு திரும்பி விடுவோம் என்று நினைத்தார்கள். ஆனால், நாங்கள் அப்படி எங்கும் செல்லவில்லை. கோடை வெயிலுக்கு அஞ்ச மாட்டோம். அதை சமாளிக்க மின்விசிறிகளை இங்கு பொருத்தியுள்ளோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “விவசாயிகளின் போராட்டத்திற்கு எவரேனும் ஆதரவு குரல் கொடுத்தாலோ, உதவி செய்தாலோ, அவர்கள் அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்களால் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். விவசாயிகள் இறுதியில் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவதே மத்திய அரசின் அடுத்த இலக்கு. அடுத்த 20 ஆண்டுகளில் உங்கள் நிலத்தை உங்களிடமிருந்து பறிப்பதுதான் அவர்களின் திட்டம்.” என்று ராகேஷ் திகாயத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்