Aran Sei

விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ – நாடு முழுவதும் பெருகிய ஆதரவு

Image Credits: Live Law

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இன்று (டிசம்பர் 8) பொது வேலை நிறுத்தத்தை நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதற்குப் பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது.

வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக தலைநகர் டெல்லி முழுவதும் விரிவான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இயல்புநிலையைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பாரத் பந்த் : வேளாண் சட்டங்களுக்கு எதிராக எஸ்டிபிஐ மறியல்

உத்தரப்பிரதேசத்தில், காணொலி உரையாடுதளம் வழியாக அனைத்து நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எந்தவொரு நிலையிலும் அமைதி மற்றும் ஒழுங்கைச் சமரசம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா காவல்துறை போக்குவரத்து குறித்த ஆலோசனையை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடைகளை மக்கள் சந்திக்க நேரிடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு : வீட்டுக்காவலில் டெல்லி முதல்வர்

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைநிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்தவொரு அத்தியாவசிய அல்லது அவசர சேவைகளும் பாதிக்கப்படாது என்றும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி, விவசாயிகளின் பொது வேலை நிறுத்த அழைப்புக்கு ஆதரவளித்துள்ளது. அம்மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் அவரது ஆதரவாளர்களுடன் ட்ராக்டர்களிலும் மற்ற வாகனங்களிலும் விவசாயிகள் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் சிவில் லைன், சோடாலா, எம்ஐ சாலை மற்றும் பிற பகுதிகளில் பேரணியாகச் சென்றார்.

தெலங்கானா

ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) தலைமையில் அம்மாநிலம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் அனுசரிக்கப்படுகிறது. தெலங்கானாவில் பாஜகவை தவிர பிற கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.

புதுச்சேரி

புதுச்சேரி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. ஜவஹர்லால் நேரு தெருவில் உள்ள முக்கிய சந்தை மூடப்பட்டுள்ளது. சாலைகளில் தனியார் வாகனங்கள் மட்டுமே காணப்பட்டன.

அசாம்

வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதாலும் பெரும்பாலான வாகனங்கள் ஓடாததாலும் அசாமில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன என்றும் சில இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம்

கடைசி நிமிடத்தில், மாநில அரசு முழு அடைப்பிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அரசுப் பேருந்துகள் ஓடவில்லை, சாலைகளில் ஆட்டோக்கள் குறைவாக இருந்தன. அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் மதியம் 1 மணிக்குப் பிறகு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை ஆதரிக்கப் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களை மூ டியுள்ளனர். பஞ்சாபில் 3,400 க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளன. விவசாயிகள் நெடுஞசாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்திலும் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இடது சாரி கட்சிகள் இணைந்து ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாகச் சீல்டா ரயில் நிலையத்தில் 26 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

விவசாயிகள் போராட்டம் : கைக்கோர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம்

நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு வலுத்துவரும் நிலையில், தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன. திமுக, இடது சாரி கட்சிகள், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல கட்சிகள் முழு அடைப்பிற்கு ஆதரவு அளித்துள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்