திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் உங்களை வன்முறைக்கு ஆட்படுத்தி, உங்கள் மீது பொய் வழக்குப் போட்டால், அவர்களின் கை, கால்களை உடைக்க வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக சட்டபேரவை உறுப்பினர் ஒருவர் பாஜக தொண்டர்களிடம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் கண்டனங்களை பெற்ற காணொளியில், போங்கான் தெற்கு தொகுதியின் பாஜக சட்டபேரவை உறுப்பினர் ஸ்வபன் மஜூம்டர், “திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் நம் தொண்டர்கள்மீது பொய் வழக்குகள் போட முயன்றால், நம் தொண்டர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டால், அந்த தலைவர் பத்திரமாக வீடு திரும்ப முடியாமல் போகலாம்” என்று கூறியுள்ளார்.
“எல்லாம் போதும். தற்காப்புக்காக அவரது கைகளையும் கால்களையும் உடைத்து விட்டு என்னிடம் வாருங்கள். நான் உறுதியளிக்கிறேன். நான் உங்கள் பக்கம்தான் இருப்பேன்” என்று ஸ்வபன் மஜூம்தர் தனது ஆதரவாளர்களிடம் கட்சிக் கூட்டத்தில் கூறியது அக்காணொளியில் உள்ளது.
இக்காணொளியின் நம்பகத்தன்மையை பிடிஐ-யால் சரிபார்க்க முடியவில்லை.
ஸ்வபன் மஜூம்தரின் கருத்துகளுக்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், இது பாஜக தலைவர்களின் மனநிலையையும் அவர்களின் பண்பாட்டையும் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், “இத்தகைய மொழி, வார்த்தைகள், மிரட்டல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். திரிணாமுல் காங்கிரஸுக்கு அப்பகுதியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் விரக்தியடைந்து இதுபோன்ற மிரட்டல்களை விடுக்கிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.