Aran Sei

கர்நாடகாவில் இந்துத்துவாவினரால் மிரட்டப்படும் கிறிஸ்துவ பாதிரியார்கள் – ஜெபக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என காவல்துறை அறிவுரை

ர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில், இந்துத்துவ அமைப்புகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், ஜெபக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று சில கிறிஸ்துவ அமைப்பினரிடம் காவல்துறையினர் அறிவுறுத்தியிருப்பதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“சில கிறிஸ்துவ பாதிரியாளர்களை அழைத்த காவல்துறையினர், வலதுசாரி அமைப்புகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், ஜெபக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என்றும், காவல்துறை பாதுகாப்பு வழங்க முடியாது” என்றும் பாதிரியார் தாமஸ் ஜான்சன் என்பவர் கூறியதாக தி நியூஸ் மினிட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய இடத்தில் “ஜெய் ஸ்ரீராம்” முழக்கம் – குருகிராமில் தொடர் கதையாகியுள்ள இதுபோன்ற நிகழ்வுகள்

கர்நாடக சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 13 முதல் 24 ஆம் தேதி வரை, பெலகவி நகரில் நடைபெறவுள்ள நிலையில், பெலகவி மாவட்டத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ பாதிரியார்களை அழைத்துள்ள காவல்துறை, சட்டமன்ற கூட்டம் முடியும் வரை, ஜெபக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என்ற கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்துத்துவ அமைப்புகளான ஸ்ரீராம் சேனா, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் கட்டாய மதமாற்றத்தை எதிர்ப்பதாக கூறி, கிறிஸ்துவ பாதிரியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியுள்ளதாக நியூஸ் மினிட் கூறுகிறது.

ஜெபக் கூட்டம் நடத்துவதற்கு, இடம் வாடகைக்கு கொடுக்கக் கூடாது என்று, கட்டிடங்களின் உரிமையாளர்களை காவல்துறை மற்றும் வலதுசாரி அமைப்புகள் மிரட்டுவதாக பாதிரியார் தாமஸ் ஜான்சன் கூறியுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தேவாலயங்களுக்குள் புகுந்து பொருட்களை வலது சாரிகள் உடைகிறார்கள், மக்களை தாக்குகிறார்கள். ஆனால், இறுதியில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக பாதிரியார்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படுகிறது” என்று கூறும் பாதிரியார் தாமஸ் ஜான்சன் “பெலகவியில் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்ற தடைச் சட்டத்தை நிறைவேறச் செய்வதற்காகவே இவ்வாறு அவர்கள் நடந்துகொள்கிறார்கள்” என கூறியுள்ளதாகவும் தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

கிறிஸ்தவர்களில் ரோமன் கத்தோலிக்க பிரிவினரை விட, எந்தவித பலமான பின்புலமும் இல்லாத புராட்டஸ்டன்ட் பிரிவினரே வலதுசாரிகளால் இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொள்வதாக, பாதிரியார்கள் தெரிவிக்கின்றனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், ஹரியானா மாநிலம் குருகிராமில், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் பொது இடங்களில், இந்துத்துவ அமைப்பினர் இடையூறு செய்யும் நிகழ்வு அடிக்கடி நடப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், முதன் முதலில் இதுபோன்ற நிகழ்வு குருகிராம் செக்டர் 39 பகுதியில் தொடங்கியதாகவும், தற்போது அது ஆறுக்கும் மேற்பட்ட இடங்களுக்குப் பரவியுள்ளதாகவும் தி இந்து கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்