Aran Sei

அரசு பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாதது – தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு

Credit: Kalaignar Seithigal

தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யும் பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாதது; அப்படி தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழிவகுக்கும் என்று மாநில  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெறும் நோக்கில் தமிழ்நாட்டில் முதன்முறையாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த மே 13,14,15 ஆகிய தேதிகளில் ”ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022” என்ற திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

30க்கும் மேற்பட்ட அரங்குகளில் 20க்கு மேற்பட்ட பிரியாணி வகைகள் இடம்பெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், துணை ஆட்சியர், வட்டாட்சியர், நகர மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உட்படப் பலர் பங்கேற்றனர்.

அப்பொழுது பேசிய மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் “பீப் பிரியாணி” தவிர அனைத்து வகையான பிரியாணி வகைகளும் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் ஏன் பீப் பிரியாணி தவிர்க்கப்படுகிறது என்பதற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை.

மேற்கண்ட செய்திக் குறிப்பையும் விளம்பரத்தையும் கண்ட ஆம்பூரில் உள்ள சமூக, அரசியல் அமைப்புகள், இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் உணவுத் தீண்டாமை என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு மட்டுமின்றி, ஒருவேளை அப்படி நடந்தால் தாங்கள் மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவுக்கு எதிரிலேயே பீப் பிரியாணி கடைகளை நடத்துவோம் என்றும் அறிவித்தனர்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளர் திரு. சி.ஓம்பிரகாசம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு 12.05.2022 அன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

இப்புகாரைப் பரிசீலித்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், “அரசின் மாவட்ட நிர்வாகம் நடத்துகின்ற பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை மட்டும் புறக்கணித்து இருப்பது, அங்கு வசிக்கும் ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான அதிகாரப்பூர்வமான பாகுபாடாகும். இதற்கு ஏன் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று விளக்கம் கேட்டு, ஓர் அறிவிக்கையை 12.05.2022 அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியது.

இந்நிலையில், மழை காரணமாக பிரியாணி திருவிழாவை ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

மேலும், ஆணையத்தின் அறிவிக்கைக்கு 07.06.2022 அன்று பதில் அறிக்கை அனுப்பிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், சர்ச்சைக்குரிய பிரியாணி திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் சாதி ரீதியாக மக்களிடம் பாகுபாடு காட்டவில்லை என்று தெரிவித்திருந்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் பதிலை ஆணையம் ஏற்றுக் கொண்டாலும், அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என்பதையும், அப்படித் தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டுக்கு வழிவகுக்கக் கூடாது என்ற உத்தரவை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிறப்பிக்கிறது.

ஆணையத்தின் இவ்வுத்தரவு, தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Source: Kalaignar Seithigal

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்